தமிழகம்

அதிமுக வேட்பாளர் பட்டியலால் சலசலப்பு: புகார் அளிக்க முடியாமல் கட்சியினர் தவிப்பு

செய்திப்பிரிவு

தமிழக உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில் வெளியிடப் பட்ட வேட்பாளர் பட்டியலால், ‘சீட்’ கிடைக்காதவர்கள் மத்தி யில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையில் இருப்பதால், தலைமையிடம் நேரடியாக புகார் அளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் நடக் கிறது. இத்தேர்தலில் போட்டி யிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. அன்று காலையே ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் 12 மாநகராட்சிகள், 31 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது. சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட 140 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகளின் உறுப்பினர் கள் தொடர்பான வேட்பாளர் பட்டியலை பொறுத்தவரை, அந்தந்த மாவட்ட செயலாளர் கள், பொறுப்பு அமைச்சர்கள் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இப்பட்டியலில் புதியவர்கள் அதிகம் என்பதால், தற்போது பதவியில் உள்ளவர்களில் விருப்ப மனு அளித்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும், இந்த முறை தங்களுக்கு ‘சீட்’ கிடைக்கும் என எதிர்பார்த்து மனு அளித்தவர்களில் பலரது பெயரும் பட்டியலில் இடம் பெறாததால் மாவட்டச் செயலாளர்கள் மீது புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

கட்சித் தலைமை அலுவலகம், முதல்வர் இல்லம் என பலரும் புகார் அளித்து வருகின்றனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது புகார் அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் 8 முறை மாற்றப் பட்டது.

தற்போது, மாவட்டச் செய லாளர்கள் தங்கள் விருப் பப்படி, வேண்டியவர்கள் பெயர் களை பரிந்துரைத்திருப்பதால், உண்மையாக கட்சிக்கு உழைத் தவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டிருப் பதாக கட்சியினர் தெரிவிக் கின்றனர். எனவே, முதல்வரை நேரடியாக சந்தித்து மனு அளிக்க முடியவில்லையே என புலம்பி வருகின்றனர்.

இதற்கிடையில் விருகம்பாக்கம் வட்டச் செயலாளர் ஆர்.சேகர் தன் பெயர் பட்டியலில் இல்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதேபோல், விருகம்பாக்கம் பகுதியில் பலரும் மாவட்டச் செயலாளர் மீது தலைமையிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், அதிமுக வேட்பாளர் பட்டிலை மாற்றக் கோரி புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. வரும் 3-ம் தேதிக்குள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், அதற்குள் மாற்றம் வருமா என்பது விருப்ப மனு அளித்தவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT