வறட்சியில் இருந்து கால்நடை களைப் பாதுகாக்க தமிழகத்தில் 300 இடங்களில் வைக்கோல் உள்ளிட்ட உலர் தீவன விற்பனை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததாலும் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. பெரும் பாலான ஆறுகள், குளங்கள், கண்மாய்கள், கிணறுகள் நீரின்றி காணப்படுவதால் விவசாயம் பாதிக் கப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, வறண்ட நிலப்பரப்பில் புற்கள் வளர வாய்ப்பு இல்லாததால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கான தீவ னப் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது.
இதைச் சமாளிப்பதற்காக மாநிலம் முழுவதும் வறட்சி அதிகம் பாதித்த பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு உலர் தீவனங்களை மானிய விலையில் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 300 இடங்களில் உலர் தீவன சேமிப்பு, விற்பனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற் கான இடங்களைத் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்து பட்டியலிட்டுள்ளனர்.
இதன்படி அரியலூர் மாவட்டத் தில் 5, கோயம்புத்தூரில் 10, கடலூ ரில் 9, தருமபுரியில் 12, திண்டுக் கல்லில் 9, ஈரோட்டில் 12, காஞ்சி புரத்தில் 10, கன்னியாகுமரியில் 4, கரூரில் 6, கிருஷ்ணகிரியில் 10, மதுரையில் 10, நாகையில் 4, நாமக்கல்லில் 10, நீலகிரியில் 4, புதுக்கோட்டையில் 15, பெரம் பலூரில் 4, ராமநாதபுரத்தில் 7, சேலத்தில் 20, சிவகங்கையில் 8, தஞ்சாவூரில் 8, தேனியில் 5, திருவள்ளூரில் 8, திருவாரூரில் 2, திருவண்ணாமலையில் 22, தூத்துக்குடியில் 8, திருச்சியில் 7, திருநெல்வேலியில் 15, திருப்பூரில் 10, வேலூரில் 17, விழுப்புரத்தில் 26, விருதுநகரில் 9 இடங்களில் உலர் தீவன சேமிப்பு, விற்பனை கிடங்குகள் அமைப்பதற்கான பணிகள் தற்போது வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, “மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வறட்சியின் தாக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய தீவனப் பற்றாக்குறையை தவிர்ப்ப தற்காக 300 இடங்களில் உலர் தீவன விற்பனை மையங்கள் அமைக் கப்பட உள்ளன.
அந்தந்த பகுதிகளில் வசிக்கக் கூடிய விவசாயிகளிடம் இருந்து வைக்கோல், சோளத்தட்டை, கம்புத் தட்டை உள்ளிட்ட உலர் தீவனங் களை மொத்தமாக வாங்கி, அவற்றை இம்மையங்களின் மூலம் மானிய விலையில் விற்பனை செய்ய உள்ளோம். நாளொன்றுக்கு ஒரு மாட்டுக்கு 3 கிலோ தீவனம் அளிக்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயி 5 மாடுகளுக்கான தீவனங்களைப் பெறலாம். அதே சமயம், ஒரு வாரத்துக்கு தேவை யான தீவனங்களை ஒரே நாளில் பெற்றுச் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2-வது வாரத்தில் இருந்து இத்திட்டம் செயல்படத் தொடங்கும். இதற்குத் தேவையான உலர் தீவனங்களைக் கொள்முதல் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தேவை ஏற்பட்டால் இந்த மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றனர்.