கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தனது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி கட்சி நிர்வாகி களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அன்று கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு 93-வது பிறந்த நாளின்போதும் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்தார்.
அதன்பிறகு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 7-ம் தேதி மருத்துவமனையில் இருந்து திரும்பிய அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.
நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் டிசம்பர் 15-ம் தேதி நள்ளிரவில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதை எளிதாக்கும் டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 17-ம் தேதி சென்னை வந்து கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித் தார். அதிமுக சார்பில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
சிகிச்சை முடிந்து டிசம்பர் 23-ம் தேதி கருணாநிதி வீடு திரும்பினார். ஆனாலும், அவரை யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. நோய்த் தொற்று ஏற்படும் என்பதாலும், ஓய்வு தேவைப்படுவதாலும் கருணாநிதியை சந்திக்க யாரும் வர வேண்டாம் என திமுக தலைமை அலுவலகம் அறிவித்தது. இதனால் திமுக முக்கிய நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்ற யாரும் கருணாநிதியை சந்திக்க அனுமதிக்கவில்லை. அவரது புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை.
கருணாநிதி உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கடந்த மார்ச் 1-ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி, கருணாநிதியிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார். அந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்.
அதன்பிறகு, கடந்த 12-ம் தேதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ‘தி இந்து’ நாளிதழ் தொழிற்சங்க தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அந்தப் புகைப்படமும் பத்திரிகைகளில் வெளியானது.
இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வரும் ஜூன் 3-ம் தேதி தனது பிறந்த நாளில் கட்சி நிர்வாகிகளை அவர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள செய்தி திமுக வினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.