தமிழகம்

விவசாயிகள் அள்ளியது 44.10 லட்சம் கனமீட்டர் வண்டல் மண்: அமைச்சர் செல்லூர் கே.ராஜு தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 9,986 நீர்நிலைகளில் விவசாயிகளுக்கு 44.10 லட்சம் கனமீட்டர் வண்டல் மண் இலவசமாக வழங்கப்பட்டதாக கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

குளங்களில் சேர்ந்துள்ள வண்டல்மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக அள்ளிக்கொள்ள அனுமதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒத்தக்கடையில் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 53 விவசாயிகளுக்கு உத்தரவுகளை வழங்கி அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியது:

தமிழகத்தில் இதுவரை 86,335 விவ சாயிகள் 9,986 நீர்நிலைகளில் 44.10 லட்சம் க.மீ.வண்டல் மண்ணை எடுத்துள்ளனர். 83 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மேட்டூர் அணை தூர்வாரப்படுகிறது.

மக்கள் நல அரசாக செயல்படுவதால் உள்ளாட்சி தேர்தல் உட்பட எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் அதிமுக அரசையே ஆதரிக்க வேண்டும் என்றார்.

ஆட்சியர் கொ.வீரராகவராவ் பேசுகையில், ‘மதுரை மாவட்டத்தில் 4,018 பேருக்கு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜமாபந்தியில் பெறப்பட்டுள்ள 12,223 மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும்‘ என்றார்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜுவிடம் செய்தியாளர்கள், அதிமுகவுக்காக பணியாற்றப் போவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளாரே எனக் கேட்டனர். தினகரன் என்ற பெயரை கேட்டதும் அமைச்சர், ‘இது அரசு விழா’ எனக் கூறிவிட்டு பதில் தர மறுத்தபடியே காரில் ஏறி புறப்பட்டார்

உதயகுமாருக்காக 1 மணி நேரம் காத்திருந்த செல்லூர் ராஜு

விவசாயிகளுக்கு மண் அள்ளும் உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒத்தக்கடை, வாடிப்பட்டி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் நடப்பதாகவும், இதில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஒத்தக்கடைக்கு காலை 10 மணிக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜு வந்தார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவில்லை. அதிகாரிகள் விசாரித்துவிட்டு, ஆர்.பி.உதயகுமார் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என தெரிவித்ததால் அமைச்சர் செல்லூர் கே.ராஜு காத்திருந்தார். பகல் 11 மணியாகியும் அவர் வரவில்லை. மீண்டும் அதிகாரிகள் விசாரித்தபோது உதயகுமார் வருகை ரத்தானது தெரிந்தது. இதையடுத்து பகல் 11 மணிக்கு மேல் அமைச்சர் செல்லூர் ராஜு மட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு புறப்பட்டார். வாடிப்பட்டி, உசிலம்பட்டிக்கு 2 அமைச்சர்களும் செல்லாததால், அதிகாரிகளே விவசாயிகளுக்கு உத்தரவுகளை வழங்கினர்.

SCROLL FOR NEXT