தமிழகம்

எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிப்பவர்களிடம் அடுப்பு வாங்க கட்டாயப்படுத்தும் காஸ் ஏஜென்ஸிகள்: கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

செய்திப்பிரிவு

புதிய எரிவாயு இணைப்புக்கு விண்ணப்பிப்பவர்களிடம் எரிவாயு அடுப்பு வாங்க வேண்டுமென காஸ் ஏஜென்ஸிகள் நிர்பந்திப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் புகார் அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவர் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில், ‘ஆட்சியர் அலுவலகம் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதால், துறை அலுவலகங்களை அணுக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, கோவை மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து அரசு அலுவலகக் கட்டிடங்களையும் விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் 2000 ஏக்கர் விவசாயத்துக்கு பயன்படுகிறது. அதை சிலர் அனுமதியின்றி மோட்டார் மூலம் உறிஞ்சுகிறார்கள். அதைத் தடுத்து நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுகவை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பீளமேடு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ரயில்பாதையை ஒட்டியுள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்துக்கான சர்வீஸ் சாலையில் செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்துல்கலாம் பசுமை பாதுகாப்புத்திட்டம் 2020 அமைப்பைச் சேர்ந்த அன்பரசு அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கோவை தாளியூர் பேராட்சியில் உள்ள கலிக்கநாயக்கன்பாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பும், ஓணாப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையும் மழைநீர் வடிகாலில் கழிவுநீரைத் திறந்துவிடுகின்றன. அது ஓடையில் சென்று நொய்யலில் கலக்கிறது. குடியிருப்புப் பகுதிகள் வழியாக கழிவுநீர் செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அந்த மனுவில், ‘புதிய எரிவாயு இணைப்பு கேட்பவர்களிடம் அடுப்பு வாங்க வேண்டுமென காஸ் ஏஜென்ஸிகள் நிர்பந்தித்து வருகின்றன.

நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, அடுப்பு வாங்க வேண்டுமென நிர்பந்தித்து, புதிய எரிவாயு இணைப்புக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் ஏஜென்ஸிகள் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். எரிவாயு அடுப்புடன் வந்து அவர் மனு அளித்தார்.

மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள ரூ.10 நாணயங்களை கடைகளில் வாங்க மறுப்பதாகவும், வணிகர் சங்கங்கள் மூலமாக நாணயம் செல்லும் எனத் தெரிவித்து, வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய இந்து மகாசபை வலியுறுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி 44-வது வார்டு நல்லாம்பாளையத்தில் 5 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், மேலும் ஒரு டாஸ்மாக் திறக்கப்பட எதிர்ப்பு தெரிவித்து கொமதேகவினர் மனு அளித்தனர். நெ.4 வீரபாண்டியில் மருத்துவமனை, பள்ளி ஆகியவற்றின் இடையே மதுக்கடை அமைப்பதைத் தடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT