தமிழகம்

அண்ணா சாலை காதி பவனில் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

செய்திப்பிரிவு

சென்னை அண்ணாசாலையில் உள்ள காதி பவனில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.

சென்னை அண்ணாசாலையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு எதிரில், ‘காதி கிராமோத்யோக் பவன்’ இயங்கி வருகிறது. தரைத்தளத்துடன் மூன்று தளங்களைக் கொண்ட இந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் கதர் ஆடைகள், வீட்டுக்கு தேவை யான பொருட்கள் விற்பனை செய் யப்படுகின்றன. முதல் தளத்தில் சர்ட், பேண்டு போன்ற அடைகளும், இரண்டாவது தளத்தில் கொலு பொம்மைகள் போன்றவைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் அதே தளத்தில் கொலு பொம்மைகளுக்கான வைக்கோல் போன்ற மூலப்பொருட்களும் உள்ளன.

இங்கு சுமார் 50 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந் நிலையில் நேற்று காலை வழக்கம் போல் காதி பவன் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது பகல் சுமார் 11.30 மணி அளவில் இரண்டாவது தளத்தில் தீப்பிடித்தது.

இதையடுத்து பொருட்களை வாங்க வந்திருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ இரண்டாவது தளம் முழுவதும் பரவியது. தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு உடனடி யாக தகவல் கொடுக்கப்பட்டது. திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலைய அதிகாரி ஏ.ராஜசேகரன், மாவட்ட அதிகாரி கே.ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில் திருவல்லிக்கேணி, எழும்பூர், வேப்பேரி ஆகிய இடங்களில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த தீ விபத்தில் கொலு பொம்மைகள், முக்கிய ஆவணங்கள் இருந்த 3 பீரோக்கள் உட்பட ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

          
SCROLL FOR NEXT