தமிழகம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அடுத்த 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 6000 கன அடி வீதம் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

6000 கன அடி தண்ணீர் போதுமானதல்ல என்ற போதிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும் என்ற ஆணை வரலாற்று சிறப்பு மிக்கது. அதை பாமக முழுமனதுடன் வரவேற்கிறது.

காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்குடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கடந்த 9 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்ட 05.02.2007 அன்று முதல் மத்திய அரசிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் இக்கோரிக்கையை பலமுறை வலியுறுத்தி வந்திருக்கிறார்.

ஆனால், 9 ஆண்டுகளாகியும் இல்லாத காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை என்ற போதிலும், அரசியல் காரணங்களுக்காகவே மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும், பாரதிய ஜனதாவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயங்கின.

காங்கிரசுக்கோ, பாரதிய ஜனதாவுக்கோ தமிழகத்தில் செல்வாக்கு இல்லாததால், கர்நாடகத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கைத் தக்க வைப்பதற்காக, கர்நாடகத்துக்கு ஆதரவாக வாரியத்தை அமைக்காமல் கிடப்பில் போட்டன.

காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பை அளித்த நாளில் இருந்து 90 நாட்களில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடாமலும், மேலாண்மை வாரியத்தை அமைக்காமலும் அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துரோகம் செய்தது. அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவும் மேலாண்மை வாரியத்திற்காக வலியுறுத்தாமல் விட்டுவிட்டது. அதன்பின் உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகு தான் 19.02.2013 அன்று காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை ஒரு முறையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியை இரு முறையும் நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவர்களும் அதற்கு ஒப்புகொண்டனர். அந்த தகவலை உமாபாரதி செய்தியாளர்களிடமும் தெரிவித்தார்.

ஆனால், அமைச்சர் உமாபாரதியை கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடாவும், ஆனந்த குமாரும் சந்தித்துப் பேசிய பின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் எந்த அளவுக்கு அரசியல் விளையாடியது என்பதற்கு இதைவிட உதாரணங்களை கூற முடியாது.

அனைத்துத் தடைகளையும் மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதன் மூலம் காவிரி பாசனப் பகுதியில் விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும், மகிழ்ச்சியும் காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் செய்யும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதிலும் இதே போன்ற நிலை ஏற்பட்டது.1990ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 1991ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. ஆனாலும், மத்திய ஆட்சியில் இருந்தவர்கள் செய்த சதியாலும், தமிழகத்தை ஆட்சி செய்தவர்களின் அலட்சியத்தாலும் அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து 1998ஆம் ஆண்டில் தான் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே காவிரி ஆணையத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் பல மாதங்கள் தாமதப்படுத்தி தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. அதேபோன்ற நிலை இப்போதும் ஏற்பட்டுவிடக் கூடாது.

காவிரி ஆணையம் கூட காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை நிர்வகிப்பதற்கான அதிகாரம் இல்லாததாகவே அமைக்கப்பட்டது. காவிரி பிரச்சினை இன்று வரை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காவிரி ஆணையம் அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடி தான் காரணம் ஆகும். இப்போதும் அதேபோன்று அரசியல் சித்து விளையாட்டுக்களை மேற்கொள்ளாமல், முழுமையான அதிகாரங்களுடன் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவும் 4 வாரங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பைத் தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்கவும், தமிழர்களுக்கு முழு பாதுகாப்பளிக்கவும் மத்திய, கர்நாடக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டக் கூடாது. தமிழக அமைச்சர்கள் குழு டெல்லியில் முகாமிட்டு, மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT