அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில், உதகை ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மரங்கள், ஓட்டு வீடுகளின் கூரை சந்துகளில் கூடு கட்டி, பல்கி, பெருகி வந்த சிட்டுக்குருவிகள், தற்போது வாழ்விடம் இல்லாமல் மெல்ல, மெல்ல மறைந்து வருகின்றன. நவீன தொழில்நுட்பங்களின் அபரிமித வளர்ச்சிக்கு முதலில் பலியாவது சிட்டுக்குருவிகள் என்கிறார் நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) அறங்காவலர் சிவதாஸ்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு அதிகரிக்கும் கட்டிடங்கள், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை காரணமாகி வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் அலை பேசி வளர்ச்சி அபரிமிதமானது. அனைத்து மக்களிடம் சராசரியாக ஒரு செல்போன் உள்ளது. சிலர் 2-க்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இதற்காக நகரங்கள் முதல் கிராமங்கள் வரை செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அலைபேசிக்கான அலைவரிசை, சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்புக்கு தள்ளி உள்ள தாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின் றன. இந்நிலையில், பொதுமக்களி டம் சிட்டுக்குருவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சிட்டுக்குருவிகளை வளர்க்க மக்களிடம் இயற்கை ஆர்வலர்கள் கூடுகளை வழங்கி வருகின்றனர். இது, மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.
பராமரிப்பு
இத்தகைய மாற்றத்தை, உதகை யில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஐந்துலாந்தர் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், அவர்களது ஆட்டோ நிறுத்தத்தில் ‘மினி சரணாலயம்' அமைத்து சிட்டுக்குருவிகளை பாதுகாத்து வருகின்றனர்.
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன், ஐந்துலாந்தர் பகுதியில் மரம், செடி, கொடிகளை வளர்த்து சிறிய பூங்கா அமைத்தனர். சிட்டுக்குருவிகள் தங்க ஏதுவாக, ஆங்காங்கே பானைகள் வைத்து, தினமும் அதற்கான உணவு, தண்ணீர் வைத்தனர்.
விரும்பிய சூழல் கிடைத்ததால், தங்களின் சரணாலயமாக அந்த இடத்தை அவை மாற்றிவிட்டன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஐந்துலாந்தர் பகுதியில், தற்போது காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகளின் கீச்சு குரல்கள் கேட்கின்றன.
சிட்டுக்குருவிகளுக்காக தங்களது சிறுமுயற்சி பலன் அளித்துள்ளதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.