இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பான படங்களை அமெரிக்கா வியாழக்கிழமை வெளியிட்டது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் நடக்கவிருக்கும் நிலையில் இலங்கைக்கு எதிரான ஒரு அழுத்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
சீமான் (நாம் தமிழர் கட்சி):
இலங்கையில் நடந்தது போர்க் குற்றமல்ல. திட்டமிட்ட இனப்படுகொலை. தலையீடற்ற பன்னாட்டு விசாரணை நடத்தினால் இது தெளிவாகும். தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்று இலங்கைத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஆனால் இந்த கோரிக்கைகளை வலியுறுத்திப் பேச இந்தியா தயாராக இல்லை. தேவயானி கோப்ரகடேவுக்காக பேசும் இந்திய அரசு, தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து எதுவும் செய்வதில்லை. ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கப் போவதில்லை. தமிழர்களின் வேதனை புரிந்தாலும் இந்தியாவின் உறவு அவசியம் என்று கருதும் நாடுகளும் இந்தி யாவை பகைத்துக் கொள்ளாது.
சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை):
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை எடுத்துக் காட்டும் படங்களை வெளியிட்டால் மட்டும் போதாது. தன்னிச்சையான அனைத்து உலக நாடுகள் சார்பில் மனித உரிமை மீறல்களின் புலனாய்வு நடத்தப்பட வேண்டும். ஐ.நா.வின் மேற்பார்வையில் தனி ஈழத்துக்கான பொது வாக் கெடுப்பு நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தும் தீர்மானங்கள் ஐ.நா. கவுன்சிலில் நிறைவேற்றப் பட்டால்தான் இப்படங்களை வெளி யிடுவதற்கான பொருள் கிடைக்கும்.
கலிபூங்குன்றன் (திராவிட கழகம்):
இப்போது வெளியிடப்பட்டி ருக்கும் படங்கள் ஐ.நா.கவுன்சிலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு முன்னோட்டமாகவே தெரிகிறது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை எதிர்த்து அழுத்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்தான் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்,” என்றார்.