ஜேடர்பாளையம் காவரி ஆற்றில் பரிசல் இயக்க ஏலம் எடுத்தவர்கள், தண்ணீர் இல்லாததால் ஆற்றில் மண் சாலை அமைத்து அவ்வழியே செல்வோரிடம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் வழியாக காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. ஆற்றின் எதிர் கரையில் ஈரோடு மாவட்டம் அமைந்துள்ளது. ஜேடர்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தினமும் மக்கள் சென்று வருகின்றனர்.
இதற்காக காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கப்படுகின்றன. பரிசலில் மக்களை அழைத்துச் செல்வதற்கான உரிமம் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் முறையில் தனி யாருக்கு வழங்கப்படுகிறது.
பரிசலில் செல்லாமல் சாலை மார்க்கமாக செல்ல வேண்டு மானால் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும். சாலை வழிப்பயணம் தூரம் அதிகம் என்பதால், பெரும்பாலானோர் பரிசல் மூலமே பயணம் மேற் கொள்வர்.
பரிசல் இயக்க இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஏலத்தில் வடகரையாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் ரூ.12 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார்.
இந்நிலையில், மழையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காவிரி ஆறு முற்றிலும் வறண்டு மணல் மேடாகக் காட்சியளிக்கிறது. இதனால், பரிசல் துறையை ஏலம் எடுத்தவர்கள் பரிசல் இயக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், ஏலம் எடுத்தவர்கள் பொதுப்பணித் துறையினரிடம் அனுமதி பெறாமல் காவிரியாற்றின் குறுக்கே ஜேடர்பாளையத்தையும் எதிர்கரையில் உள்ள ஈரோடு மாவட்டம் கருவேலாம்பாளையத் தையும் இணைக்கும் வகையில் மண் சாலை அமைத்துள்ளனர்.
இச்சாலை வழியாக நடந்து செல்பவர்களுக்கு ரூ.5, இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு ரூ.30 மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் ரூ.50 வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, “ஆற்றைக் கடக்க நடந்து அல்லது வாகனங்களில் செல்ல பணம் வசூலிப்பது எந்த வகை யில் நியாயம்? இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்றனர்.
இதுகுறித்து கபிலர்மலை வட் டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பாலமுருகன் கூறும் போது, ‘‘பரிசல் மூலம் ஆட்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை ஏற்றிச் செல்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆற்றில் மண் பாதை அமைத்து கட்டணம் வசூல் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. நான்கு சக்கர வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல அனுமதியில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக் கப்படும்’’ என்றார்.