தமிழகம்

சென்னையில் மழையால் சேதமான சாலைகள்

செய்திப்பிரிவு

சென்னை மாநகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பெரும் பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன.

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியவாறு உள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து மழைநீரை வெளியேற்றிக் கொண்டு இருந்தாலும், தொடர் மழையால் சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க முடியவில்லை.

பணியில் 2,978 ஊழியர்கள்

பலத்த மழையின்போது 284 இடங்களில் மழை நீர் தேங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 சுரங்கப் பாதைகளில் மழை தேங்குவது தெரியவந்துள்ளது. இப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை உடனுக்குடன் அகற்றி வருகின்றனர். மொத்தம் 2,978 ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 29 பம்பு செட்டுகள், 19 நீர் உரிஞ்சும் லாரிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

சேதமடைந்த சாலைகள்

சென்னை மாநகரில் மாநகராட்சி பராமரிப்பில் 387 கி.மீ. நீளம் கொண்ட 471 பேருந்து சாலைகள் மற்றும் சுமார் 5 ஆயிரம் கி.மீ. நீளம் கொண்ட 32 ஆயிரம் உட்புற சாலைகள் உள்ளன. இவை ஏற்கெனவே பல்வேறு துறை பணிகள் காரணமாக ஆங்காங்கே சேதமடைந்திருந்தன. இந்நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், இச்சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வியாசர்பாடி அம்பேத்கர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கே தகுதியற்ற சாலைகளாக உள்ளன. மழை ஓய்ந்த பிறகு, சாலைகளை சரி செய்ய திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் வட சென்னையில் ஓட்டேரி, வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

அவ்வீடுகளில் குடியிருப்போர், மழைநீரை வெளியேற்றினாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீண்டும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிடுகிறது. இதனால் பல வீடுகளில் கட்டில் மீது வைத்து சமையல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT