தமிழகம்

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆலோசனையில் செயல்படும் ‘மக்கள் பாதை’ அமைப்பில் ஆர்வத்துடன் இணையும் இளைஞர்கள்

கே.சுரேஷ்

ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் ஆலோசனையில் செயல்பட்டு வரும் ‘மக்கள் பாதை’ எனும் அமைப்பில் ஏராளமான இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டு, மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என முழங்கிவரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலில் ஈடுபட வேண்டும் என தமிழகமெங்கும் இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும், தங்களது விருப்பத்தைப் பதிவு செய்தனர். இதுகுறித்து திருச்சி, மதுரை, சென்னையில் இளைஞர்கள் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது.

அப்போது, “சமூகத்தினுடைய ஓர் அங்கம்தான் அரசியல். எனவே, அரசியலில் நேர்மையைக் கொண்டுவர எண்ணக்கூடியவர்கள் தொடங்க வேண்டிய இடம் சமூகம்தானே தவிர, அரசியல் அல்ல. எனவே, அரசியலைத் தாண்டி, இந்த சமூகத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும் என எண்ணுகிறேன்” என்று இளைஞர்களின் கேள்விக்கு சகாயம் பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின், ‘மக்கள் பாதை’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு, தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் சமூக ஆர்வலர்கள், இளைஞர்களைக்கொண்டு கட்டமைக்கப் பட்டு வருகிறது. இதன்மூலம் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘மக்கள் பாதை’ அமைப்பு குறித்து அமைப்பின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராமதாஸ் கூறியதாவது: ‘மக்கள் பாதை’யில் கல்வி, அரசியல், சமூகம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக திண்ணை

என்ற ஓர் அம்சம் செயல்படுத் தப்படுகிறது. இதேபோல, விளையாட்டை மேம்படுத்த திடல், இயற்கை விவசாயத்தை மேம்படுத்த கலப்பை, நெசவுத் தொழிலையும் நெசவாளர்களையும் பாதுகாக்க தறி, அழிந்துவரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க கலைஎன்ற 5 அம்சங்கள் செயல்படுத்தப் படுகின்றன.மேலும், ‘மக்கள் மருந்தகம்’ எனும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய மருந்தகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. ரத்த தானம்,

கண் தானம் உள்ளிட்ட விழிப்புணர்வுப் பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த அமைப்புக்கு, அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் என்றார்.

இதற்கிடையே, புதுக்கோட்டை யில் உள்ள புதுக்குளத்தில் ‘மக்கள் பாதை’ அமைப்பின் சார்பில் சுமார் 3 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இப்பணியில் ஈடுபட்ட இளைஞர்களை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கடந்த 7-ம் தேதி நேரில் சென்று பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

‘மக்கள் பாதை’ அமைப்பானது அரசியலைத் தாண்டி, தமிழ் சமூகம் மேம்பாடு, தலைமுறை மேம்பாடு என்ற அடிப்படையில் பல்வேறு தளங்களில் மிகச் சிறந்த சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமூகத்தின் மேம்பாட் டுக்காக இளைஞர்கள் செயல்படும்போது, அரசு ஊழியராக நான் அவர்கள் அருகே இருப்பது அபாயமும் அல்ல, குற்றமும் அல்ல என்றார்.

SCROLL FOR NEXT