தமிழகம்

பன்னா இஸ்மாயிலுக்கு சேலம் சிறையில் சிகிச்சை

செய்திப்பிரிவு

சேலம் மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் தீவிரவாதி பன்னா இஸ்மாயிலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தீவிரவாதி பன்னா இஸ்மாயில் கைது செய்யப்பட்டார். அவரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், ஒரே நாளில் விசாரணையை முடித்துக் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பன்னா இஸ்மாயில் வழக்கறிஞர் ஜாகீர் அகமது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், உடல்நிலை சரியில்லாத பன்னா இஸ்மாயிலுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.

இதையடுத்து, பன்னா இஸ்மாயிலை சேலம் மத்திய சிறையில் அடைக்கவும், மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலும், வரும் 20-ம் தேதி பன்னா இஸ்மாயிலை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கூடுதல் பாதுகாப்பு

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பன்னா இஸ்மாயிலுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலை, மாலை நேரங்களில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவரைச் சுற்றிலும் சிறைக் காவலர்கள் 24 மணி நேரமும் நின்று கண்காணித்து வருகிறார்கள். பன்னா இஸ்மாயில் உள்ள பகுதிக்கு மற்ற கைதிகள் யாரும் வந்து விடாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பன்னா இஸ்மாயில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் சிறையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT