ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் உடுமலை சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி கவுசல்யாவின் தாய், தந்தை உட்பட 9 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(22). தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்து வந்த இவர், தன்னுடன் பயின்ற திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், கடந்த மார்ச் 13-ம் தேதி ஒரு கும்பல் இருவரையும் வெட்டியது. இதில், சங்கர் உயிரிழந் தார். கவுசல்யா படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை சின்னச் சாமி, தாயார் அன்னலட்சுமி, செல்வக்குமார், மைக்கேல், பால கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டி வீரன்பட்டியைச் சேர்ந்த மணி கண்டன், பாண்டித்துரை, தன்ராஜ் மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றதில் நடந்து வருகிறது. இந்நிலையில், பட்டி வீரன்பட்டி மணிகண்டன் மற்றும் கல்லூரி மாணவர் ஆகி யோரை தவிர்த்து மற்ற 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை யில் அடைக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர், ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதனை ஏற்ற ஆட்சியர், 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.