புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகர் ஆணைப்படி முதல்வர் உத்தரவின் கீழ் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சந்திரசேகரன் ஆளுநர் உத்தரவுப்படி நகராட்சி ஆணையர் இருக்கையில் இன்று(திங்கட்கிழமை) காலை அமர்ந்தார்.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் வீட்டில் முதல்வர், அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வந்த புகார் மனு அடிப்படையில் முதலியார்பேட்டை தொகுதியிலுள்ள சுதானா நகரில் ஆய்வு கூட்டம் நடத்தி கருத்து கேட்குமாறு நகராட்சி ஆணையர் சந்திரசேகருக்கு உத்தரவிட்டார். அக்கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் (அதிமுக) அழைக்கப்படவில்லை.
அதைத்தொடர்ந்து பாஸ்கர் சட்டப்பேரவையில் ஆணையர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொடுத்தார். இந்நிலையில் ஆளுநர் அறிவுறுத்தியப்படி ஆணையர் போலீஸில் தன்னை எம்எல்ஏ தரப்பு மிரட்டியதாக புகார் தந்தார்.
இதனால் ஆளுநருக்கும், ஆணையருக்கு எதிராக அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்கொடி தூக்கினர். அதைத்தொடர்ந்து ஆணையரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார். அவ்விடத்தில் கலைப்பண்பாட்டுத்துறை இயக்குநர் கணேசன் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடி ஆணையர் சந்திரசேகரனை பொறுப்பில் சேர உத்தரவிட்டார். அத்துடன் தலைமை செயலர் மனோஜ் பரிதாவை விமர்சித்தார். முதல்வர் நாராயணசாமியும் களத்தில் இறங்கி, சபாநாயகர் உத்தரவே அமல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) நகராட்சி ஆணையராக அமரப் போவது கணேசனா, சந்திரசேகரனா இவர்களில் யார் என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்திருந்தது.
காலையில் நகராட்சி ஆணையர் அலுவலகம் உள்ள கம்பன் கலையரங்கத்துக்கு காலையில் கணேசன் வந்து அமர்ந்திருந்தார். அப்போது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சந்திரசேகரன் வந்தார். ஆளுநர் செயலர் உத்தரவை காண்பித்தார். இதைத்தொடர்ந்து கணேசன் இருக்கையிலிருந்து எழுந்தார்.
இருவரும் ஒரே பேட்ஜ் அதிகாரிகள் என்பதால் தேநீர் அருந்தி விட்டு கைகுலுக்கி விட்டு புறப்பட்டனர்.
சபாநாயகர் ஆணைப்படி முதல்வர் உத்தரவுப்படி செயல்பட்ட தலைமை செயலர் ஆணை ஏற்கப்படாமல் ஆளுநரின் செயலர் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளதால் சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், துணை சபாநாயகர் சிவகொழுந்து ஆகியோர் கூடி விவாதித்தனர்.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கேட்டதற்கு, "யார் உத்தரவு வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை. அதில் ஆளுநர் கையெழுத்து உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அலுவலகம் சென்று இதுதொடர்பாக விளக்கம் அளிக்க அரசுஅதிகாரிகளிடம் கோருவேன். விதிமீறப்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கையுண்டு" என்று குறிப்பிட்டார்