தமிழகம்

முறையாகவும், முழுமையாகவும் பணிகளை மேற்கொள்ளுமா திருச்சி மாநகராட்சி? - தூர் வாரிய 6 நாட்களிலேயே தொடரும் பழைய நிலை

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாநகரப் பகுதிகளில் உள்ள மழைநீர், சாக்கடை வடிகால்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர் வாரும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் அவற்றுக்கான நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆண்டுதோறும் விவசாயிகள், பொதுமக்கள், நுகர்வோர்- சேவை சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்கள், சாக்கடை வடிகால் மற்றும் வாய்க்கால்களைத் தூர் வாரும் பணிகள் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டும், மாநகராட்சி சார்பிலும் நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 2-ம் தேதி பொன்மலைக் கோட்டம் 42-வது வார்டு சிம்கோ மீட்டர் அருகில் உள்ள மழைநீர் வடிகால், அரியமங்கலம் கோட்டம் 23-வது வார்டு வரகனேரி வாய்க்கால், ரங்கம் கோட்டம் தனியார் ஹோட்டல் அருகில் உள்ள மழைநீர் வடிகால் ஆகியவற்றில் தூர் வாரும் பணி நடைபெற்றது. இந்தப் பணிகளை, மாநகராட்சி ஆணையர் என்.எஸ்.பிரேமா, நகரப் பொறியாளர் நாகேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோட்டம் 9-வது வார்டு கரூர் புறவழிச் சாலை அருகேயுள்ள கோட்டை வாய்க்கால், அரியமங்கலம் கோட்டம் 15-வது வார்டு வரகனேரி தஞ்சாவூர் சாலை மாரியம்மன் கோயில் அருகேயுள்ள இரட்டை வாய்க்கால் ஆகியவற்றில் தலா ரூ.5 லட்சம் செலவில் நடைபெற்ற தூர் வாரும் பணிகளை கடந்த 4-ம் தேதி மேயர் ஜெயா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

மேலும், கடந்த 5-ம் தேதி கோ-அபிஷேகபுரம் கோட்டம் 52-வது வார்டு ராமலிங்க நகர் கத்தரி வாய்க்கால், 45-வது வார்டு கருமண்டபம் ஜெஆர்எஸ் நகர் கொள்ளாங்குளம் வாய்க்கால் ஆகியவற்றைத் தூர் வாரும் பணிகளை மேயர், ஆணையர், நகரப் பொறியாளர், துணை மேயர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இந்த நிலையில், 6 நாட்களுக்கு முன் தூர் வாரும் பணி நடைபெற்றதாகக் கூறப்பட்ட கத்தரி வாய்க்கால் உட்பட அனைத்து வாய்க்கால்களிலும் பழைய நிலையே தொடர்கிறது என்றும், மாநகராட்சி நிர்வாகம் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.சேகரன் கூறியது: திருச்சியில் மழைநீர் வடிகால், வாய்க்கால்களில் தூர் வாரும் பணிகள் நடைபெறவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்தளவுக்கு தூர் வாரும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுகிறது.

ஆற்றில் சாக்கடை கலக்கக் கூடாது என்று சட்டமே உள்ள நிலையில், நீர்நிலைகளில் சாக்கடை கலப்பதைத் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. பாசன வாய்க்கால்கள் தூர்ந்துபோகும்பட்சத்தில் அவை மழைநீர் வடிகாலாகத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். சாக்கடையாக அல்ல. இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உண்டு. வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளைக் குப்பை கொட்டும் இடமாகக் கருதக் கூடாது.

எனவே, நீர்நிலைகளைத் தூர் வாரும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் செய்யாமல், தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், தூர் வாரும் பணிகள் முழுமை பெறும்.

குறிப்பாக, தற்போது மழைக்காலத்துக்கு முன்னதாக நீர்நிலைகள் தூர் வாரும் பணிகளை முறையாக-முழுமையாக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT