கரும்புக்கான கொள்முதல் விலையை கடந்த ஆண்டை விட குறைத்து, தமிழக அரசு அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் 2013-14 ஆண்டு பருவத்தில் கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2,650 வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இதனால், கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரும்புக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரி வந்த நிலையில், யானைப் பசிக்கு சோளப்பொறியைப் போல தமிழக அரசு அறிவித்திருக்கும் கரும்புக் கொள்முதல் விலை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
பல மாநிலங்களில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாநில அரசின் பரிந்துரை விலை அதிகமாக இருக்கிறது.
கரும்புக்கான உற்பத்திச் செலவுடன், லாபமாக 50 சதவிகிதத்தை சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரைத்தபடி வழங்க வேண்டும். அதன்படி, 50 சதவிகித லாபத்தை சேர்த்து, கொள்முதல் விலையாக 3,765 ரூபாய் நிர்ணயித்திருக்க வேண்டும்
எனவே, கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு குறைந்தது ரூ.3,500 ஆக நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இனி வரும் காலங்களில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் சர்க்கரை ஆணையர் மூலம் பேச்சு நடத்தி கரும்புக்கான கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.