திருச்சி, மதுரை, கோவை உட்பட 6 மாநகர காவல்துறைக்கு சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் கண்காணிப்பு வாகனம் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், பதற்றத்துக்குரிய நிகழ்வுகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வதில் காவல் துறையினருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இதைச் சமாளிக்கும் வகையில், திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய 6 மாநகர காவல் துறையினருக்கு சிசிடிவி கேமராக்கள் உட்பட அதிநவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு வாகனம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வாகனங்களை வடிவமைக்கும் பணிகள் தமிழ்நாடு காவல் துறையின் தொழில்நுட்பப் பிரிவு மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நவீன கேமராக்கள்..
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியது: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இணை யான வசதிகளுடன் கூடியதாக, இந்த நடமாடும் கண்காணிப்பு வாகனம் வடிவமைக்கப்படுகிறது. முன்புறம், பின்புறம், பக்க வாட்டுப் பகுதிகளில் சுழலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் நடைபெறும் நிகழ்வுகளையும், துல்லியமாகக் கண்டறியும் வகையில் உயர்தரமான கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க வாகனத் தின் உட்பகுதியில் 40 அங்குல எல்இடி திரை அமைக்கப்படுகிறது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த வாகனத்தில், காவலர்கள் அமர்ந்து கண்காணிப்பதற்கும், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பதற்குமான தொழில்நுட்ப வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
இதுமட்டுமின்றி, அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்தும், வாகனத்தில் அமைக்கப்படும் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை நேரடி யாகப் பார்க்க முடியும். இதனடிப் படையில், அதிகாரிகள் உடனுக்கு டன் உத்தரவுகளை பிறப்பித்து, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.
கேமராவில் பதிவாகும் அனைத்துக் காட்சிகளும் தானா கவே சர்வரில் சேமிக்கப்படும். ஏதேனும் அசம்பாவிதமோ, சர்ச்சைக்குரிய நிகழ்வுகளோ ஏற்பட்டால், அடுத்தகட்ட நடவடிக் கைகளுக்கு இந்த கேமரா பதிவுகள் உதவும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது..
இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த வாகனங்கள் தயாராகிவிடும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விவிஐபி பிரச்சாரங்களின்போது கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள இந்த வாகனங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்றனர்.