குடும்பத்தின் ஏழ்மை நிலை காரண மாக போதிய பயிற்சி பெற முடியா மல் சிரமப்படுகிறார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குண்டு எறிதல் வீராங்கனை கவுரி சங்கரி. தனது ஒலிம்பிக் கனவு நிறைவேற தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்போதும், இந்தியா சார்பில் பதக்கங்களை குவிக்க முடியாமல் போவதற்கு, ‘வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சி இல்லை, போதிய கட்டமைப்பு வசதி இல்லை’ என் பதே முக்கிய காரணமாக சொல்லப் படுகிறது. நமது நாட்டில் திறமை யான வீரர், வீராங்கனைகளுக்கு பஞ்சமில்லை. அவர்களை கண்ட றிந்து, பயிற்சி அளிப்பதில்தான் சிக்கல் நிலவுகிறது.
இதற்கு மற்றொரு உதாரணமாக இருக்கிறார், ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியைச் சேர்ந்த குண்டு எறிதல் வீராங்கனையான கவுரி சங்கரி(19). மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் இவர் 2015-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றவர். அதன் பின் நிதி உதவி இல்லாததால் போதிய பயிற்சி பெற முடியாமலும், குடும்ப வறுமை காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியா மலும் சிரமப்படுகிறார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் கவுரி சங்கரி கூறியதாவது: ஆசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி, 2015-ம் ஆண்டு ஜுன் 29-ம் தேதி சீனாவின் யுகாங் நகரில் நடைபெற்றது. இதில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்றேன். 13.82 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கம் பெற்றேன்.
அதற்கு முன்னதாக தேசிய அளவில் பெங்களூரு, கொச்சியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக் கான குண்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கமும், ராஞ்சியில் 2 முறை வெள்ளிப் பதக்கமும், திருவனந்தபுரத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றேன். இதன் அடிப் படையில் விளையாட்டு கோட்டா வில் சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன்.
தந்தைக்கு கூலி வேலை
எனது தந்தை ஜெயமூர்த்தி, கூலி வேலை செய்கிறார். எனது படிப்புக்கே வட்டிக்கு பணம் பெற்றுதான் செலவு செய்கிறார். சீனாவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்வதற் கான எனது செலவை ஏற்றுக் கொள்ள எந்தவொரு ஸ்பான்சரும் கிடைக்கவில்லை. சீனா செல்வ தற்காக வாங்கிய கடனை, மிகவும் சிரமப்பட்டுத்தான் தந்தை திருப்பிச் செலுத்தினார்.
தற்போது உள்ள குடும்ப சூழ் நிலையில் என்னால் குண்டு எறிதல் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. இந்த விளையாட்டில் சாதனை படைக்க முறையான உணவு மற் றும் உடற்பயிற்சி அவசியம். திறமை யான பயிற்சியாளரின் வழிகாட்டு தலும் வேண்டும். தமிழக அரசு நிதி உதவி அளித்து ஊக்கப்படுத் தினால், அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.