தமிழகம்

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு: திமுக தொடர்ந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

உள்ளாட்சி தேர்தலில் ஆளுங் கட்சியினர் முறைகேடுகள் புரிய வாய்ப்பு உள்ளதால் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி பாமக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பாமகவைச் சேர்ந்த மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.தமிழரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஏற்கெனவே 2011-ல் தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால், தற்போது 2001- மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படியே இந்த உள்ளாட்சித் தேர்தலை தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை பாலின மற்றும் இனச் சுழற்சி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 2011-ல் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமப் பஞ்சாயத்துக்கள் மற்றும் 31 மாவட்டங்களில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்டது.

இந்தக் கணக்கெடுப்பில் அந்தக் கிராமப் பஞ்சாயத்தின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு? எஸ்சி, எஸ்டி பிரிவினர் எத்தனை சதவீதம் வசிக்கின்றனர்? பெண்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற எல்லா விவரங்களும் உள்ளன.

எனவே 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் தொகுதிகளை மறுவரையறை செய்து சுழற்சி அடிப்படையில் பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியின வகுப்பினருக்கு உரிய இடஒதுக்கீடு சலுகைகளை வழங்க வேண்டும்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி வாதிட்டார்.

இதே கோரிக்கை தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வரவுள்ளதால், அன்றைய தினம் அந்த வழக்கோடு இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கும் வகையில் பட்டியலிட பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT