தமிழகத்தில் சுற்றுலாவை நவீனப்படுத்தும் முயற்சியாக, 2016-ம் ஆண்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைமுறைக்கு வரவுள்ளது. முதல்கட்டமாக கொடைக்கானல், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரியை இணைக்கும் வகையில் இச்சேவை தொடங்கப்படுகிறது.
இந்தியாவில் சிறந்த சுற்றுலா தலங்களில் நவீன வசதிகளை மேம்படுத்த, ஆசியன் வளர்ச்சி வங்கி உதவியுடன் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் வெளிநாடு களுக்கு இணையாக, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுமையான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
முதல்கட்டமாக கன்னியா குமரி, மதுரை, ராமேசுவரம், தஞ்சாவூர், கொடைக்கானல் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா பகுதிகளை நவீனப்படுத்த முயற்சி நடந்து வருகிறது. இதற்காக சமீபத்தில் சுற்றுலாத்துறை துணை இயக்குநர் வேணுகோபால் தலைமையில், ஆசியன் வளர்ச்சி வங்கி அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஏற்கனவே இருக்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு சேவையுடன் இணைந்து, கடல் சவாரிக்காக மேலும் நவீன படகுகளை அறிமுகப்படுத்துதல், இந்தியா வின் தென்முனையான கன்னியா குமரியில் இருந்து ஹெலிகாப்டர் சுற்றுலாவை பிரபலப்படுத்துதல் போன்ற திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. கன்னியாகுமரி யில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான பரந்த இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தகவல்
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, `பிலிப்பைன்ஸ் நாட்டி னர் இந்தியாவில் உள்ள சிறந்த சுற்றுலா மையங்களில் உள்ள இயற்கை எழில்சூழ்ந்த பகுதிகளில் வான்வழி சுற்று லாவை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்ற னர். இதற்காக ஆசியன் வளர்ச்சி வங்கி உதவியுடன் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே தஞ்சை மாவட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், புராதன நினைவு சின்னங்களுக்கு செல்லும் பகுதி களில் நவீன தங்கும் விடுதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2016-க்குள்..
உலக நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தமிழக சுற்றுலா தலங்களில் ஹெலிகாப்டர் சேவை அறிமுகமாக உள்ளது. முதல்கட்டமாக கன்னியாகுமரி, ராமேசுவரம், மதுரை, கொடைக் கானல் ஆகியவற்றை இணைக் கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகமாகிறது. தூரமும், நேரமும் மிகவும் குறைவாக இருப்பதால், இது சிறந்த சர்வதேச சுற்றுலா சேவையாக மாறும். 2016-ம் ஆண்டு இறுதிக்குள் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அடுத்தகட்டமாக ஊட்டி - வால்பாறை - கோவை மார்க்கம், ஏற்காடு-சேலம் மார்க்கம், தஞ்சை - வேளாங்கண்ணி - திருச்சி மார்க்கம் ஆகிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும்’ என்றனர்.