புதுச்சேரியில் மீண்டும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு வீச்சு என பல்வேறு குற்றச்சம்பங்கள் நடைபெற்றன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வந்தன. இந்நிலையில், கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ரவுடிகள் மீதும் கட்டுப்படுத்தப்பட்டனர்.
கொலை, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, வெடிகுண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் இதனால் புதுச்சேரியில் சற்றே தனிந்திருந்தன. முதல்வர் நாராயணசாமியும், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பயமின்றி வந்து செல்கின்றனர். வணிகர்கள் அச்சமின்றி வர்த்தகத்தை பார்த்து வருகின்றனர் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி வந்தார்.
இந்நிலையில் தற்போது, மீண்டும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. செயின் பறிப்பு, வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவது, கஞ்சா விற்பனை, சூதாட்ட கிளப், மிரட்டி பணம் பறிப்பது, ஆயுதப்படை கிடங்கில் தோட்டாக்கள் மாயம் என குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் பொறியாளர் வீட்டில் 70 பவுன் நகை திருட்டு, ஓடும் பேருந்தில் காட்டேரிக்குப்பம் கைலாசபுரத்தைச் சேர்ந்த பெண்ணிடம் 30 பவுன் நகை கொள்ளை, வில்லியனுார் பிருந்தாவனம் நகரில் வியாபாரியின் வீட்டில் 25 பவுன் கொள்ளை என கடந்த இரண்டு மாதங்களில் 10க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
அதோடு ஆன்லைன் மோசடி, அடிதடி போன்றவைகளும் நடைபெற்று வருகின்றன.
இவையின்றி கடந்த ஒரு மாதமாக கொலை குற்றங்களும் புதுச்சேரியில் அதிகரித்து வருகின்றன. கடந்த 15 நாட்களில் 5 கொலைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் அரசியல் பிரமுகர்களின் கொலைகள் அதிகம். புதுச்சேரியை ஒட்டியுள்ள ரெட்டிச்சாவடி பகுதியில் அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளரான பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த வீரப்பன் கடந்த 3-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 7-ம் தேதி வில்லியனுார் பிள்ளையார்குப்பம் புதுநகர் பகுதியில் மயூரி சம்மட்டியால் அடித்து கொலை; கடந்த 15-ம் தேதி கோரிமேட்டில் ஓய்வுபெற்ற ஜிப்மர் ஊழியர் செல்வராஜூ, அவரது பேரன் ஆகியோர் கொலை; கடந்த 17-ம் தேதி ஊசுடு காங்கிரஸ் பிரமுகர் மாயவன் வெட்டிக் கொலை; 19-ம் தேதி என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் வேலழகன் மர்ம நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை என்று தொடர் கொலை சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் செயின் பறிப்பு, வீடுகளை உடைத்து திருடும் சம்பவம் அதிகமாக இருக்கிறது. ஒரு பவுன், இரண்டு பவுன் பறிக்கப்பட்டாலோ, திருடப்பட்டாலோ போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தால் உடனடியாக வழக்கை எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும் வழக்குப்பதிவு செய்ய தாமதப்படுத்துகின்றனர். இதனால், குற்றவாளிகள் எளிதாக தப்பித்து விடுகின்றனர். மேலும் சமீப நாட்களாக அடிக்கடி கொலை சம்பவம் அதிகமாகி வருகிறது. இதனால் பயமாக உள்ளது. எனவே, போலீஸாரின் ரோந்து பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். உரிய பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் தெரிவிக்கின்றனர்.