தமிழகம்

கரும்பு ஆதாய விலை ரூ.2,850 ஆக நிர்ணயம்: ரூ.550 உயர்த்தி முதல்வர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

இந்தாண்டு கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசின் ஆதாய விலையான ரூ.2 ஆயிரத்து 300 உடன், தமிழக அரசின் பரிந்துரை விலை ரூ.550-ம் சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 850 வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெல் சாகுபடி உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் திருத்திய நெல் சாகுபடி முறையில் பயிரிடப்படும் பரப்பை அதிகரித்தல், பயறு வகைகள் சாகுபடியை பெருக்குதல், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவருதல், துல்லிய பண்ணையம் வழங்குதல், கிடங்குகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால், உணவு உற்பத்தியில் ஆண்டுதோறும் தமிழகம் புதிய சாதனை படைத்து வருகிறது.

கரும்பு உற்பத்தித் திறனை அதிகரித்து, உற்பத்தியை பெருக்கும் வகையிலும், கரும்பு ஆலைகள் முழு அரவை திறனை அடையும் வகையிலும், நிழல் வலை கூடத்தில் நாற்று உற்பத்தி, நுண்ணீர் பாசனம் மூலம் உரமிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.

நுண்ணீர் பாசன உபகரணங்களுக்கென சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயித்து வருகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நியாயமான மற்றும் ஆதாய விலையை விட உயர் அளவில் இந்த பரிந்துரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. 2015-16-ம் ஆண்டுக்கான கரும்பு பருவத்துக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 300 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

கரும்பு விவசாயிகள் நலன் கருதி மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு உட்பட ரூ.550 உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 850 கிடைக்கும். இது கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மன மகிழ்ச்சியை அளிக்கும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT