தமிழகம்

காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்

செய்திப்பிரிவு

கோவையில் பதிவு செய்யப்பட்ட காற்றாலை மோசடி வழக்கு தொடர்பாக, கேரள சோலார் பேனல் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள சரிதா நாயர், கோவை நீதி மன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் தியாகராஜன். ஜவுளி உற்பத்தி ஆலை நிர்வாக இயக்குநர். இவர், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில், கடந்த 2008-ம் ஆண்டு புகார் அளித்தார்.

அதில், கோவையைத் தலைமை யிடமாகக் கொண்டு இயங்கிய சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் எனக் கூறி தொடர்புகொண்ட, கேரள மாநிலத்தைச் சேர்ந்த சரிதா எஸ்.நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் நாயர், ஆர்.சி.ரவி ஆகியோர் காற்றாலை அமைத்துத் தருவதாக கூறினர்.

காற்றாலை அமைப்பதற்காக, ரூ.26 லட்சத்தை கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கொடுத்தேன். ஆனால், காற்றாலை அமைத்துத் தராமல் பணத்துடன் தலைமறைவாகி விட்டனர் எனத் தெரிவித்திருந்தார்.

மற்றொரு புகார்

உதகையைச் சேர்ந்த அபு பாபாஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜோத்ஸ்னா என்.கிளாசண்ட் என்பவர், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை நிறுவனத்தினர் ரூ.6.57 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தி ருந்தார்.

கைது வாரண்ட்

இந்த இரு வழக்குகள் தொடர்பாக, கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி, சரிதா நாயர் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு, கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி முதல், இந்த வழக்குகளின் விசார ணைக்கு குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் ஆஜராகவில்லை. இதைய டுத்து, 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கேரள மாநிலத்தில் நடைபெற்ற சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

இந்நிலையில், காற்றாலை மோசடி வழக்கு தொடர்பாக, கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், சரிதா நாயரை, கோவை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை அழைத்து வந்தனர். பின்னர், கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் மறு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இவ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஜூ ராதாகிருஷ்ணனையும், 27-ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என உத்தர விட்டார். விசாரணைக்கு பின்னர், சரிதா நாயர் மீண்டும் கேரள மாநிலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

SCROLL FOR NEXT