முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தங்களை விடுதலை செய்யக் கோரி எஸ்.ஜெயகுமார், பி.ராபர்ட் பயாஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேல் நாங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டோம். எனவே சட்ட விதிகளின்படி விடுதலை பெறும் உரிமை எங்களுக்கு உள்ளது. ஆகவே, இது தொடர்பான உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக ஏற்கெனவே மாநில அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வன், பி.என்.பிரகாஷ் ஆகியோரைக் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும் வகையில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.