தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல் படுத்த வேண்டும். மேலும், இரட்டை பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
சென்னை சென்ட்ரலில் நேற்று நடந்த விழாவில் சுமார் ரூ.185 கோடி மதிப்பிலான 10 திட்டங்களை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார். விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் அதிக ரயில்களை இயக்கும் வகையில் இரட்டை பாதை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். வடமாநிலங்களைவிட தென்மாநிலங்களில் ரயில் சேவை குறைவாக இருக்கிறது. இந்தக் குறையைப் போக்கும் வகையில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ரயில்வே துறை முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும்’’ என்றார். அதைத் தொடர்ந்து எம்.பி.க்கள் பேசியதாவது:
டி.கே.ரங்கராஜன்: பெரம்பூர் ஐசிஎப் தொழிலாளர்களின் பிரச்சி னைக்கு தீர்வு காணும் வகையில் தொழிற்சாலையை மேம்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள மதுரை - நாகர்கோவில் இரட்டை பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது பாதை பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ஏ.நவநீதகிருஷ்ணன்: ரயில்வே துறையில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவ தாக புகார்கள் வருகின்றன. எனவே, தமிழக மாணவர்கள், இளை ஞர்களை ரயில்வே துறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வி.மைத்ரேயன்: தமிழகத்தில் ரயில் திட்டங்களை நிறைவேற்ற ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சென்னை கோட்டத்தில் கடற்கரை - அரக்கோணம் 4-வது புதிய பாதை, கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு 3-வது, 4-வது பாதை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
ஜெ.ஜெயவர்த்தன்: பறக்கும் ரயில் நிலையங்களில் உள்ள காலியிடங்களில் சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வருவாயை பெருக்கும் வகையில் காலியாக வுள்ள இடங்களை வர்த்தக பயன் பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதேபோல, எல்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, கே.எஸ்.ரவிச்சந்திரன், பி.சத்யநாராயணன் ஆகியோரும் ரயில் பயணிகளின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்திப் பேசினர். பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றக் கோரி திருநின்றவூர் ரயில் பணிகள் நலச்சங்கம், தமிழ்நாடு தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.