தமிழகம்

எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு வலுத்து வரும் எதிர்ப்பு: நெடுவாசல் போராட்டத்துக்கு 100 கிராம மக்கள் ஆதரவு

செய்திப்பிரிவு

ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் திரண்டதால் பரபரப்பு

நெடுவாசலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்துக்கு 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 12-வது நாளான நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல், கோட்டைக்காடு, வாணக்கன் காடு, கருக்காகுறிச்சி பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குருடாயில் மற்றும் எரிவாயு கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 15-ம் தேதி அனுமதி அளித்தது.

விவசாயத்துக்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய இந்த திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்துக்கு தடை விதிக்கவும், மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யவும் கோரி கடந்த 16-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக போராட்டக் குழுவையும் அமைத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம் போல, நெடுவாசல் போராட்டத்திலும் இளை ஞர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர். உள்ளூர் மக்களுடன், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங் களிலும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நெடுவாசலில் நேற்று 12-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்துக்கு ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி பகுதிகளில் உள்ள சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று, நெடுவாசலுக்கு திரண்டு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எரிவாயு திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்கும் வரை புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் போராட்டத்தை தொடர்வது, இந்த மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது, நெடுவாசலில் இருந்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலி, மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

காத்திருக்கும் போராட்டம்

கோட்டைக்காடு கிராமத்தில் தபால் அலுவலக வாசலில் நேற்று திரண்ட பொதுமக்கள் காத்திருக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத் துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு அளித்து பேசினர். நெடுவாசல் கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத் தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். மேலும், கறம்பக்குடி அருகே மருதன்கோன் விடுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கையை விளக்கி முழக்கமிட்டனர்.

          
SCROLL FOR NEXT