தமிழகம்

அரக்கோணத்தில் காலி மின்சார ரயில் தடம் புரண்டதால் விரைவு ரயில் சேவை பாதிப்பு

செய்திப்பிரிவு

அரக்கோணத்தில் நேற்று அதிகாலை மின்சார ரயில் தடம் புரண்டது. இதனால், சென்னைக்குச் செல்லும் 3 விரைவு ரயில்களும் 9 மின்சார ரயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வரை தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகாலை 4 மணி முதல் இரவு 11.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இரவு நேரத்தில் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து அரக்கோணம் வந்த மின்சார ரயில் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டது. அந்த ரயில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு யார்டு பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு தானாக ஓடி தடம் புரண்டது. இதனால் அங்கு உள்ள சிக்னல் பாயின்ட்கள் சேதமடைந்தன.

சிக்னல்கள் கோளாறு ஏற்பட்டதால், அப்போது அரக்கோணம் வழியாக சென்னை வந்த மங்களூரு விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, மின்சார ரயிலின் இன்ஜினுடன் கூடிய பெட்டியின் 4 சக்கரங்கள் தடம் புரண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையை 4 மணி நேரம் போராடி சரி செய்தனர். இதனால், அரக்கோணம் மார்க்கமாக சென்னை வரை செல்லும் ஆலப்புழா விரைவு ரயில், காவேரி விரைவு ரயில் மற்றும் 9 மின்சார ரயில்கள் காலதாம தாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றன.

தகவலறிந்த சென்னை கோட்ட துணை பொது மேலாளர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மின்சார ரயில்கள் நிறுத்தப்படும் அரக்கோணம் யார்டு பகுதி தாழ்வாக இருப்பதால், அங்கு நிறுத்தப்படும் ரயில் சக்கரத்தின் நடுவே முட்டுக்கொடுக்க வைக்கப் படும் செவ்வக வடிவலான இரும்பு தடுப்பை ரயில் சக்கரத்தின் முன்பாக வைக்க மறந்ததால், மின்சார ரயில் கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து 500 மீட்டர் தொலைவுக்கு தானாக ஓடி தடம் புரண்டது தெரியவந்தது.

இதையடுத்து, அன்றைய தினம் பணியில் இருந்த ரயில்வே ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு, நடவடிக்கை எடுக்க ரயில்வே மேலாளருக்கு துணை பொது மேலாளர் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT