ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக, உற்பத்திச் செலவு 1549 ரூபாயுடன் லாபம் ரூ.775 சேர்த்து ரூ. 2324 என்று நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''2016-17 ஆம் ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட குவிண்டாலுக்கு ரூ.60 உயர்த்தி சாதாரண ரக நெல்லுக்கு 1470 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு 1510 ரூபாயும் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சரவை அறிவித்திருக்கிறது. இந்த விலை போதுமானதல்ல. மத்திய அரசின் இந்த முடிவு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. உலகிற்கே சோறு போடும் கடவுள்களாக திகழ்பவர்கள் விவசாயிகள் தான். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகம் பசியின்றி வாழ முடியும். ஆனால், தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயிக்கும் உரிமை கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இயற்கை சீற்றங்கள், காலநிலை மாறுபாடு உள்ளிட்ட அனைத்தையும் எதிர்கொண்டு அதிக செலவு செய்து உற்பத்தி செய்யப்படும் நெல், கரும்பு போன்ற பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால் தான் விவசாயிகளின் தற்கொலை கடந்த 25 ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது.
நடப்பாண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 4.1 % மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் கடந்த ஆண்டில் நெல்லுக்கான உற்பத்திச் செலவு 10 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. இதை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
2013-14 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1424 ஆகும். 2014-15 ஆம் ஆண்டில் இது 1549 ஆக அதிகரித்திருக்கிறது. ரூ.1549 செலவு செய்து விளைவித்த ஒரு குவிண்டால் நெல்லை ரூ.1470-க்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நஷ்டத்திற்கு விற்க வேண்டும் என்று கூறுவது சரியா?
உத்தரப்பிரதேசத்தின் பரேலி நகரில் 28.02.2016 அன்று நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் 75ஆவது விடுதலை ஆண்டான 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இப்போது இருப்பதை விட இரு மடங்காக்கப் போவதாக உறுதியளித்தார். இது சாதாரணமான இலக்கு அல்ல. விவசாயத்திற்கான செலவு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அச்செலவை ஈடுகட்டும் அளவுக்கு வேளாண் விளைபொருட்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டும்.
கொள்முதல் விலையை ஒருபுறம் அதிகரிப்பதுடன் அதிக லாபம் தரும் பயிர்களை பயிரிடுவதற்கு விவசாயிகளை தயார்படுத்த வேண்டும். வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பதற்கான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் தான் விவசாயிகளின் வருமானத்தை அடுத்த 6 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க முடியும். ஆனால், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதில் மத்தியஅரசு இந்த அணுகுமுறை தொடர்ந்தால் விவசாயிகளின் வருமானம் பெருகுவதற்கு பதில் குறைந்து விடும்.
விவசாயிகள் மற்றும் வேளாண்மை வளர்ச்சிக்கான திட்டங்களை பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அதன் அறிக்கையை 04.10.2006 அன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்க வசதியாக, அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.
ஆனால், அதன்பின் 10 ஆண்டுகளாகும் நிலையில் இன்று வரை அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதன்விளைவு தான் உலகிற்கு உணவு படைக்கும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதுடன், தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.
விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாக கூறி வரும் பிரதமர் நரேந்திர மோடி, அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். அவற்றில் முதல் கட்டமாக வேளாண் விளைபொருளுக்கு அவற்றின் உற்பத்தி செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும்.
அதன்படி ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலையாக, உற்பத்திச் செலவு 1549 ரூபாயுடன் லாபம் ரூ.775 சேர்த்து ரூ. 2324 என்று நிர்ணயிக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.