கட்சிப் பெயரை பயன்படுத்தி உலக நாடுகளின் நிறுவனங்களிடம் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் நிதி வசூல் செய்துள்ளதாக தமிழக ஆம் ஆத்மி கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி மீது அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அக்கட்சியின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப் பாளர் கே.பி.நாராயணன், மாநில செயலாளர் கு.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்தவே ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. ஆனால், தமிழக ஒருங்கிணைப்பாளராக உள்ள கிறிஸ்டினா சாமி, இரண்டு அறக்கட்டளையின் இயக்குநராக செயல்படுகிறார். இந்த அறக்கட்ட ளைகளுக்கு ரூ.200 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளன. இதில், மத்திய அரசு தலையிட்டு சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சியின் பெயரைப் பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கிறிஸ்டினா சாமி நிதி வசூல் செய்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே ரூ.1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளோர். அவர் மீது நடவடிக்கை எடுக்க கட்சியின் மேலிடத்துக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளோம். அவரது முறைகேடுகள் குறித்து விசாரிக்க, தலைமையகத்தில் இருந்து 2 பேர் கொண்ட குழு விரைவில் வரவுள்ளது. எங்களை கட்சியில் இருந்து நீக்க கிறிஸ்டினா சாமிக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக கிறிஸ்டினா சாமி தரப்பினரிடம் கேட்டபோது, இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலு மாக மறுத்துள்ளனர்.
கட்சி மேலிடம் விளக்கம்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் பி.குப்தா வெளியிட்ட அறிக்கையில், ‘ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநில தலைமை அலுவலகம், சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் இயங்கி வருகிறது. மாநில ஒருங்கிணைப்பாளராக கிறிஸ்டினா சாமி செயல்பட்டு வருகிறார். ஒரு சிலர், கட்சியின் பெயரை பயன்படுத்தி கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தமிழக மக்கள் நம்ப வேண்டாம். கட்சி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் பொதுமக்கள் கூட்டம் எல்லாம் கீழ்பாக்கத்தில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திலேயே நடக்கும்’ என கூறப்பட்டுள்ளது.