தமிழகம்

கடற்கரை, ஓட்டல்களில் குவிந்த மக்கள்: சென்னையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் - தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு

செய்திப்பிரிவு

சென்னையில் நேற்று நள்ளிரவு மக்கள் உற்சாகமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வார இறுதியில் புத்தாண்டு தினம் வந்ததால் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கூட்டம் அலைமோதியது.

புத்தாண்டுப் பிறப்பதை முன்னிட்டு நேற்றிரவு 8 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். பாதுகாப்பு கருதி காமராஜர் சாலையில் வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீஸார் அனுமதிக்கவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க, மெரினாவில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். வாழ்த்து சொல்கிறோம் என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். அதற்கேற்றவாறு பெண் போலீ ஸாரும் சாதாரண உடை யில் களத்தில் இறக்கிவிடப்பட் டிருந்தனர்.

அதேபோல சென்னை முழு வதும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

புத்தாண்டைக் கொண்டாட நேற்று மாலை முதலே மக்கள் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை போன்ற இடங்களுக்கு புறப்பட்டு சென்றதால் பல்வேறு வழித் தடங்களில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததும் கடற்கரையில் கூடியிருந்தவர்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று கூட்டாக உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளில் பட்டாசுகளை வெடித்தும், பலூன்களைப் பறக்கவிட்டும், கேக் வெட்டியும் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துடன் மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். இதேபோல, மால்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேவாலங்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுப் பகுதி களில் உள்ள கிறிஸ்துவ தேவால யங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

சாந்தோம் பேராலயத்தில் நேற்று இரவு 11 மணிக்கு தமிழில் சிறப்பு ஆராதனையும் அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலியும் நடைபெற்றன. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், மயிலாப்பூர் லஸ் சர்ச், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், பிராட்வே புனித அந்தோணியார் ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களிலும் புத்தாண்டு வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றன. ஆலயங்களுக்கு வந்தவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், முண்டகக் கண்ணியம்மன் கோவில், அஷ்ட லட்சுமி கோவில், வடபழனி முருகன் கோவில், தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் உட்பட பல கோவில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன.

SCROLL FOR NEXT