நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி கண்டிருக்கும் நிலையில், திமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு டிசம்பர் 15-ம் தேதி கூடுகிறது. இதில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், கனிமொழிக்கு கட்சியில் முக்கியப் பதவி வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் தலைமைக்குத் தபால் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வட மாவட்டங்களில் இருந்து அதிகம் பேர் இப்படி கடிதம் அனுப்பும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அயராது உழைக்கிறார்
இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய வட மாவட்டத் திமுகவினர் சிலர், “கட்சி நலனுக்காகக் கனிமொழி அயராது உழைக்கிறார். கோஷ்டி சண்டைகளால் கட்சியின் சீனியர்கள் பலர் கட்சியைவிட்டு ஒதுங்கி இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அரவணைத்துப் பேசி வருகிறார் கனிமொழி. மாநிலம் முழுவதுமிருந்து வரும் கட்சியினரைச் சனிக்கிழமைதோறும் சென்னையில் தனது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுகிறார். ஆனாலும், அவருக்குக் கட்சியில் முக்கியப் பதவி ஏதும் வழங்கப்படவில்லை.
கருணாநிதியிடம் வலியுறுத்தல்
துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் 3 மாதங்களுக்கு முன்பு தலைவரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததாகச் சொன்னார்கள். அப்போதே கனிமொழிக்கு அந்தப் பதவி வழங்கப்படலாம் என நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால், சற்குணத்தின் ராஜினாமாவைத் தலைவர் ஏற்கவில்லை. கனிமொழி இப்போது கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் தலைவராக இருக்கிறார். திராவிட இயக்கங்களில் ஜெயலலிதாவைத் தவிர பெண் தலைவர்களுக்கான வேறு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது. இதைச் சரிசெய்ய வேண்டுமானால் பொதுக்குழுவில் கனிமொழி துணைப் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட வேண்டும். எங்களது இந்த நியாயமான விருப்பத்தைத் தலைவருக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்து வருகிறோம்’’என்றார்கள்.
நம்பிக்கையான தளபதி இல்லை!
கடிதம் அனுப்பியவர்களில் ஒருவரான நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கை.மணிமாறன் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில், “எந்தப் பிரதிபலனும் இல்லாமல் 1951-லிருந்து நான் கட்சியில் இருக்கிறேன். 3 முறை பொதுக் குழு உறுப்பினராக இருந்திருக்கும் நான் கடந்த 60 ஆண்டுகளில் கட்சி பயணித்த கரடுமுரடான பாதைகளை நன்கு அறிவேன். நம்பியவர்களே காலைவாரிய சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது திமுகவாகத் தான் இருக்க முடியும். முரசொலி மாறனுக்குப் பிறகு, தலைவருக்கு டெல்லியின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்த நம்பிக்கையான ஒரு தளபதி இல்லை.
கனிமொழி டெல்லிக்கு போன பிறகு அங்குள்ள தலைவர்களோடு நட்புறவை வளர்த்துக் கொண்டி ருக்கிறார். அவரிடம் ஒரு பக்குவம் தெரிகிறது. டெல்லியில் கட்சிக்காக அவர் ஆற்றுகிற பணி இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு எப்படிப் பேசமுடியும்?
குடும்ப அரசியல்
கனிமொழிக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை ‘குடும்ப அரசியல்’ என்று சொல்லித் தட்டி பறிப்பதை ஏற்கமுடியாது. எனவே, தளபதி ஸ்டாலினுக்கு அடுத்தபடியாகக் கனிமொழிக்கு கட்சியில் முக்கியப் பதவி கொடுக்க வேண்டும். வருகின்ற பொதுக்குழு விலேயே அந்த நல்ல காரியம் நடக்க வேண்டும் என்பதால்தான் என்னைப் போன்றவர்கள் தலைவருக்குக் கடிதம் எழுதி இருக்கிறோம்’’ என்றார்.