தமிழகம்

முத்துக்கிருஷ்ணன் மர்ம மரணம்: சிபிஐ விசாரணைக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். பல்கலைக்கழக விடுதியில் நண்பர்களின் அறையில் அவரது உடல் உயிரற்ற நிலையில் காணப்பட்டது.

சக மாணவர்கள் புகார் அளித்ததன் பேரில் இந்த மரணம் வெளியில் தெரியவந்திருக்கிறது.சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணனின் இந்த தகாத மரணம் அறிந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறது. அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதுடன் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறது.

முத்துக்கிருஷ்ணனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அவரது தந்தை ஜீவானந்தம், மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்ளும்படி எந்தப் பிரச்சினையும் அவனுக்கு இல்லை என்கிறார். மெரிட்டின் பேரிலேயே அந்தப் பல்கலைக்கழகத்தில் சீட் கிடைத்தது, நன்றாகப் படிப்பவன், ஆதலால் எந்தக் குழப்பத்திற்கும் ஆளாகமாட்டான் என்கிறார்.

கடந்த 10-ம் தேதியன்று தனது முகநூல் பக்கத்தில் ''இங்கு (பல்கலைக்கழகத்தில்) சமத்துவம் இல்லை'' என்று முத்துக்கிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

அண்மைக் காலமாக அங்கு பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவு ஏபிவிபி மாணவர் அமைப்பினர் பிரச்சினைகள் செய்து வருவது நாடறிந்த செய்தி.கடந்த ஆண்டும் இதே டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவ மேல்படிப்பு மாணவர் டாக்டர் சரவணன் மர்மமான முறையில் இறந்துபோனார். அவர் திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகனாவார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சரவணனின் உடற்கூராய்வு அறிக்கையில், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, யாரோ விஷ ஊசி போட்டு கொன்றிருக்கின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சரவணனின் பெற்றோர் சிபிஐ விசாரணை கேட்கின்றனர். நாடாளுமன்றத்திலும் இது பேசப்பட்டது. முத்துக்கிருஷ்ணன் சாவிலும் சந்தேகிக்கப்படும் மர்மம் விலக்கப்பட வேண்டும். அதற்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

அண்மையில் தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு அதில் நடவடிக்கை கோரி போராட்டம் நடந்து வருகிறது. இந்திய கடற்படை, கடலோர காவல் படை ஆகியவை பாதுகாப்பு அளிக்காததாலேயே பிரிட்ஜோ கொல்லப்பட்டார்.

அதேபோல் மத்திய அரசின் கையில் இருக்கும் டெல்லி காவல்துறையின் பாதுகாவலின்மையே சரவணன், முத்துக்கிருஷ்ணன் போன்ற தமிழக உயர்கல்வி மாணவர்களின் மர்ம மரணங்களுக்கும் காரணம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது.

எனவே இதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு நீதியை நிலைநாட்டுமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT