தமிழகம்

ரூ.570 கோடி விவகாரம் சிபிஐ-க்கு மாற்றம்: முத்தரசன் வரவேற்பு

செய்திப்பிரிவு

திருப்பூரில் 3 கன்டெய்னர்களில் ரூ.570 கோடி சிக்கியது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது என்று இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குபதிவு நெருங்கிய நிலையில் கடந்த மே 13ம் தேதி திருப்பூர் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.570 கோடி 3 கன்டெய்னர்களில் கொண்டு செல்லபட்டதை மடக்கி பிடிக்கப்பட்டது.

நீண்ட தாமதத்திற்கு பிறகு பாரத ஸ்டேட்வங்கி கன்டெய்னரில் இருந்த பணத்திற்கு உரிமை கோரியது. இதில் மத்திய அரசின் செல்வாக்கு செலுத்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. ரூ.570 கோடி பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப் படுவதற்காக கொண்டு செல்லப்பட்டது என்றும் கூறப்பட்டது. இதில் பல்வேறு மர்மங்கள் நீடித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

ஒரு குறிப்பிட்ட காலவரம்பிற்குள் முழு உண்மையையும் கண்டறிந்து அவைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் தவறிழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT