தமிழகம்

பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மதிமுகவில் ஐவர் குழு

செய்திப்பிரிவு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மதிமுக சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த, ஐந்து பேர் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக, இந்த முறை பா.ஜ.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, இரு கட்சித் தலைவர்கள் இடையேயும் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தை தொடங்கியது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடந்த மாதம் டெல்லிக்குச் சென்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, வைகோ அறிவித்துள்ளார். இக் குழுவில், மதிமுக பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, ஆட்சி மன்றக் குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் டாக்டர் சதன் திருமலைக்குமார்,இமயம் ஜெபராஜ், சிவகங்கை மாவட் டச் செயலாளர் புலவர் சே.செவந்தியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், மதிமுக ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, உயர்மட்டக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சனிக் கிழமை சென்னை மதிமுக தலைமையகமான தாயகத்தில் நடந்தது. இதில் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT