மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையை பறிகொடுத்த பார்வையற்ற தம்பதிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. அந்த தம்பதியின் மற்றொரு மகள், கல்லூரி வரை படிப்பதற்கான முழு செலவையும் ஏற்பதாக உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம். இவரது மனைவி மு.மாரீஸ்வரி. இவர்கள் இருவரும் பார்வையற் றவர்கள். மாரீஸ்வரிக்கு 6.1.2006-ல் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை திருடப்பட்டது.
குழந்தையை கண்டுபிடித்துதரக் கோரி 9 ஆண்டுகளுக்கு பிறகு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரீஸ்வரி ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பாதிக்கப் பட்டோர் இழப்பீட்டு நிதியில் இருந்து மாரீஸ்வரிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந் நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக் கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். அரசு சார்பில் ரூ.3 லட்சத்துக்கான காசோலை மாரீஸ்வரி, அவரது கணவர் முத்துமாணிக்கம் ஆகி யோரிடம் அளிக்கப்பட்டது.
மாரீஸ்வரியின் மற்றொரு மகள் தற்போது அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கல்லூரி வரை படிக்கத் தேவையான நிதி உதவி அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக பார் அசோசியேஷன் தலைவர் எம்.சுபாஷ்பாபு தலைமையில் நடை பெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் நகலை வழக்கறிஞர் வெயில்கனிராஜ் நீதிபதிகளிடம் அளித்தார்.
இதற்காக பார் அசோசியேஷனுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.