50 ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகருக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கிய கோப்பிரளயம் நீர்த்தேக்கத்தை மறுசீரமைக்கும் பணியில் ‘மன்னையின் மைந்தர்கள்’ என்ற உள்ளூர் அமைப்பினர் களமிறங்கி உள்ளனர்.
மன்னார்குடி நகரம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்ததற்குக் காரணம், அந்நகரின் மதுக்கூர் சாலையில் உள்ள கோப்பிரளயம் நீர்தேக்கம்தான். காவிரியிலிருந்து வடவாறு வழியாக வரும் தண்ணீர் இதில் சேமிக்கப்பட்டு, அங்கிருந்து பம்ப் செய்யப்பட்டு நகர மக்களுக்கு நக ராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
20 ஏக்கர் பரப்பளவு
கூட்டுக் குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், ஆழ்கு ழாய்க் கிணறுகள் பயன்பாட்டுக்கு வந்தபின், நகராட்சி பராமரிப்பில் உள்ள 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோப்பிரளயம் நீர்தேக்கம் கண்டுகொள்ளப்படாமல் போனது. இதனால் இந்த நீர்த்தேக் கத்திலும், அதன் அருகில் உள்ள குளத்திலும் சீமைக் கருவேல மரங் கள் வளரத் தொடங்கின.
இந்த நிலையில், மன்னார்கு டியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைக்க இடம் தேடிய போது, நகராட்சிக்குச் சொந்தமான இந்த இடத்தைத் தேர்வு செய்து, குளத்தின் மேற்குப் பகுதியில் பள்ளியையும், அதன் அருகில் பிற்படுத்தப்பட்ட மகளிர் விடுதி யையும் கட்டினர்.
மாணவிகள் சீமைக் கருவேலக் காட்டுக்குள் அச்சத்துடன் சென்று பாடம் படிக்கும் நிலையைப் பார்த்த, ‘மன்னையின் மைந்தர்கள்’ என்ற உள்ளூர் இளைஞர்கள் குழுவினர் கோப்பிரளயம் நீர்த்தேக் கத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, மழை நீரைச் சேமித்து, மன்னார்குடியின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க முடிவு செய்தனர்.
மன்னார்குடி நகராட்சியை அணுகி தங்களது எண்ணத்தை, இளைஞர்கள் குழு விளக்கியவு டன் அனுமதி கிடைத்தது. இதை யடுத்து கடந்த 5-ம் தேதி முதல் கோப்பிரளயம் நீர்த்தேக்கத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் பொக்லைன் உதவியுடன் அகற்றப் பட்டு வருகின்றன.
இதுகுறித்து மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் தலைவர் ஜீவா கூறியபோது, “150 உறுப் பினர்களைக் கொண்ட எங்கள் அமைப்பின் உறுப்பினர்களில் பலர் சென்னை மற்றும் வெளிநாடுக ளில் உள்ளனர். அவர்கள் நிதியு தவி செய்ய, உள்ளூரில் உள்ள உறுப்பினர்கள் களப்பணியாற்றி வருகிறோம்.
சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் அமைப்பு, ரூ.2 லட்சம் செலவில் இப்பணியை மேற்கொண்டுள்ளது. பணிகள் முடிவடைந்தால் நீராதாரத்தில் மழைநீரைச் சேமிக்கலாம். மாணவிகளும் அச்சமின்றி இருப்பார்கள்” என்றார்.
மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் ஆலோசகர் மருத்து வர் பாரதிச்செல்வன் கூறியபோது, “இந்த நீர்த்தேக்கத்தில் மழைநீர் சேமிக்கப்பட்டால், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன், ரயில் நிலையம் அருகே இருந்த சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, மாணவர்கள் விளையாடும் வகையில் மைதா னமாக மாற்றினோம்” என்றார்.