மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விளையும் அரியவகை பழங்கள், சாரல் காலத்தை முன்னிட்டு குற்றாலத்தில் உள்ள பழக்கடைகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணி களை பெரிதும் மகிழ்விப்பவை அருவி கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள எண்ணற்ற மூலிகைத் தாவரங்களை தழுவியவாறு பாய்ந்து வரும் தண்ணீர், அருவிகளில் பிரவாகமாகக் கொட்டும். இதில், குளிக்கும் போது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங் களில் தென்றல் காற்றுடன் பொழியும் சாரலில் நனைந்தவாறு அருவிகளில் குளிப்பது பேரானந்தத்தை அளிக்கும். இதை அனுபவிப்பதற்காக குற்றாலத் துக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணி கள் வருகின்றனர். இவர்கள் உண்டு ருசிப் பதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விளையும் விதவிதமான அரியவகை பழங்கள் குற்றாலத்தில் உள்ள பழக் கடைகளில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ரம்டான், வால்பேரி, பிளம்ஸ், மங்குஸ் தான், முட்டைப் பழம், நோனி (ராம் சீத்தா), மலை ஆரஞ்சு, துரியன் உட்பட பல்வேறு வகையான மலைப்பழங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும்.
இதுகுறித்து பழ வியாபாரி செய்யது அலி கூறியதாவது:
குற்றாலத்தையொட்டி உள்ள மேற் குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான பழத்தோட்டங்கள் 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் உள்ளன. மா, பலா, வாழை, துரியன், மங்குஸ்தான் உள்ளிட்ட ஏராளமான பழ வகைகள் இங்கு விளைகின்றன. சீஸன் காலங் களில் குற்றாலத்தில் இந்த பழங்களின் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும்.
இவை அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தவை. கண் பார்வை குறைபாட்டை போக்கும் ரம்டான் பழம் கிலோ ரூ.150 முதல் 250 வரையும், நார்ச் சத்து மிகுந்த வால்பேரி 200-க்கும், வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் குற்றாலத்தின் ராஜா என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் கிலோ 200 முதல் 400 வரையும், ரத்த விருத்திக்கு உகந்த முட்டைப் பழம், புற்று நோயாளிகளுக்கு உகந்த நோனி பழம் ஆகியவை 200-க்கும், மலை ஆரஞ்சு ஒன்று ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.
மகப்பேறுக்கு வழிவகை செய்யும் துரியன் பழம் கிலோ ரூ.300-க்கு கிடைக்கிறது. குழந்தை இல்லாத தம்பதிகள் இப்பழத்தை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். தட்டுப்பாடான காலத்தில் இப்பழம் அதிகபட்சமாக கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படும்.
குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந் தால் வியாபாரம் நன்றாக இருக்கும். தற் போது வியாபாரம் மந்தமாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.