டிடிவி.தினகரனை அழைத்துக் கொண்டு டெல்லி போலீஸார் இன்று காலை 9.55 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை புறப்பட்டனர். இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் சென்னை வந்தடைவர்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, அவரை சென்னை, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.
அதனடிப்படையில், தினகரன் சென்னை அழைத்துவரப்படுகிறார். சென்னையில் உள்ள தினகரன் வீட்டில் டெல்லி போலீஸார் சோதனை மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.
மேலும், சென்னையில் இருந்து தினகரன் பேசிய தொலைபேசி அழைப்புகளையும் டெல்லி போலீஸார் ஆய்வு செய்வர் எனத் தெரிகிறது.
கைது பின்னணி:
கடந்த 16-ம் தேதி நள்ளிரவு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை அவரிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த 19-ம் தேதி இரவு சென்னை வந்த டெல்லி போலீஸ் அதிகாரிகள், அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு சென்று சம்மன் கொடுத்தனர். அதில், 22-ம் தேதி டெல்லி போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருந்தது. வேறு வழக்குகள் இருப்பதால் ஆஜராவதற்கு அவகாசம் தர வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கையை டெல்லி போலீஸார் நிராகரித்தனர்.
இதையடுத்து, கடந்த 22-ம் தேதி டெல்லி சென்ற தினகரன், சாணக்யாபுரி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார், மறுநாளும் ஆஜராக உத்தரவிட்டனர். 25-ம் தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து தினகரன் ஆஜரானார். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடமும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், 4-வது நாள் விசாரணை முடிந்ததும் 25-ம் தேதி நள்ளிரவில் தினகரனை போலீஸார் கைது செய்தனர். வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கைது செய்தனர்.