தமிழகம்

வனத்துறையினர் அளித்த வாய்ப்பால் தொழில்முனைவோர்களாக மாறிய முதுமலை பழங்குடியினர்

செய்திப்பிரிவு

வனத்துறை அளித்த வாய்ப்பால், முதுமலையில் உள்ள உணவகம் மற்றும் ஓய்வு விடுதியை பழங்குடியினர் நடத்தி வருகின்றனர். இதனால், அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை சரணாலயம், 2007-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதனால், வணிக ரீதியிலான நடவடிக்கை களுக்கு அனுமதியில்லை எனக் கூறி, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வந்த இளைஞர் விடுதி மூடப்பட்டது.

மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இளைஞர் விடுதியை நடத்த, முதுமலையில் உள்ள பழங்குடியினரைக் கொண்டு வனக் குழு அமைக்கப்பட்டது.

பொம்மன் என்பவரின் தலைமையில் இயங்கும் வனக் குழு, தற்போது உணவகம் மற்றும் தங்கும் விடுதியை நிர்வகித்து வருகின்றது.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “முதுமலையில் வசிக்கும் இருளர் குடும்பத்தைச் சேர்ந்த 30 பேரை உறுப்பினர் களாகக் கொண்டு வனக் குழு உருவாக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக உணவகத்தை நடத்தி வருகிறோம். பரம்பிக்குளம் சரணாலயத்தில் விடுதி நடத்திவரும் பாபு என்பவரை வனத்துறையினர் வரவழைத்து, எங்களுக்கு பயிற்சி அளித்தனர். தற்போது நாங்களே உணவு தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கிறோம். ஆர்டரின்பேரிலும் உணவு தயாரித்து வழங்குகிறோம். சுற்றுலா பயணிகளிடம் எவ்வாறு பழகுவது, ஆர்டர் எடுப்பது, உணவு பரிமாறுவது, சுகாதாரத்தை பேணுவது என பயிற்சி அளிக்கப் பட்டது. வனக் குழுச் செயலாளராக வனத்துறை பிரதிநிதி உள்ளார். அவர் வரவு, செலவு கணக்குகளை மேற்பார்வையிடுவார். அனைத்து நிர்வாகத்தையும் பழங்குடியினரே ஏற்றுள்ளோம். சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த உணவகம் மற்றும் ஓய்வு விடுதியால் எங்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் நல்ல வருவாய் ஈட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வனத்துறை அளித்த வாய்ப்பால், தொழில்முனைவோர் களாக மாறியுள்ளோம்” என்றார்.

ஆலமரம்

இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி கூறும்போது, “பழங்குடியினரின் வாழ்வாதாரம் ஆலமரம்போல் பரவ வேண்டும் என்பதால், இந்த உணவகத்துக்கு ‘பானியன்’ (ஆலமரம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் வனத்தை மட்டுமே சார்ந்திருக்காமல், வாழ்வை வளமாக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT