பாஜக பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு, திருச்சியில் கடந்த ஆண்டு நடந்த இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த நானி பல்கிவாலா அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதைத்தொடர்ந்து 3-வது முறையாக கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்த மோடி, வண்டலூரில் நடந்த பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, மத்திய காங்கிரஸ் அரசு மீதான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டார். காங்கி ரஸை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என ஆவேசமாக பேசினார்.
இந்தக் கூட்டத்தில் இதுவரை பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள மதிமுக உள்ளிட்ட 6 கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டதால், வண்டலூர் பகுதியே குலுங்கியது.
இந்தக் கூட்டத்தால் பாஜக நிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழக பாஜக வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு கூட்டம் திரண்டதில்லை என்றும், இந்தக் கூட்டம் ஒரு மைல்கல் என்றும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.
கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பாமக, தேமுதிகவை மறைமுகமாக விமர்சித்தார். ‘‘ஊழல் பற்றி பேசவோ, எதிர்க்கவோ, விமர்சிக்கவோ காங்கிரஸுக்கு உரிமை கிடையாது. கூட்டம் நடத்துபவர்கள், ஊழல் எதிர்ப்பு மாநாடு என்று கூறிக் கொள்கிறார்கள். குஜராத்தில் 18 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடத்தி வரும் நரேந்திர மோடிக்குத்தான் ஊழல் எதிர்ப்பு பற்றி பேச உரிமை உண்டு. பொதுவாக கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான், தொகுதிப் பங்கீடு பற்றி பேசுவது வழக்கம். ஆனால், ஒருகட்சி தொகுதிப் பங்கீடு பற்றி முடிவு செய்துவிட்டுத்தான் கூட்டணி உடன்பாடு என்கிறார்கள். அதனால்தான் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. இந்தக் கூட்டத்தை தேர்தல் பிரச்சார தொடக்கக் கூட்டமாக நடத்த முடியாமல் போய்விட்டது’’ என்றார்.
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “நரேந்திர மோடியை பிரதமராக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். தமிழகத்தில் 2 சதவீதமாக இருந்த பாஜக வாக்கு வங்கி 20 சதவீதமாக அதிகரித்துள்ளது” என்றார்.
திருச்சி, சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரையி லும் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று பாஜக கூட்டணிக் கட்சியினர் விரும்புகின்றனர். ‘‘சென்னைக் கூட்டத்தைக் கலக்கிவிட்டோம், மற்றவர்களை கதிகலங்கச் செய்துவிட்டோம். மோடியின் உரை எங்களுக்கு புதுஉத்வேகத்தைக் கொடுத்துள்ளது’’ என்கின்றனர் தமிழக பாஜகவினர்.