தமிழகம்

மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்: பாஜகவினருக்கு ஸ்மிருதி இராணி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் சாதனைகளை வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பாஜகவினரை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கேட்டுக்கொண்டார்.

மதுரை மாநகர் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 2-ம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தொழில் வர்த்தக சங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசியதாவது:

இந்தியாவில் சுதந்திரம் பெற் ற நாளில் இருந்து பல்வேறு சமுதாயத்தினர் அரசியலமைப்பு அங்கீகாரம் பெறுவதற்காகப் போராடி வருகின்றனர். இந்த போராட்டங்கள் மோடி ஆட்சியில் முடிவுக்கு வந்து கொண்டிரு க்கிறது. ஏழைகளுக்கு வங்கிகளின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தது. மோடி அரசில் அந்த நிலைமை மாறியுள்ளது.

மோடியின் உத்தரவின்பேரில் பல லட்சம் ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு ள்ளன. எந்த உத்தரவாதமும் இல்லாமல் ஏழைகள், சிறு வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட ப்பட்டுள்ளது. இந்தியாவில் 31 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையில் ரூ.61 ஆயிரம் கோடி மானியமாக வழங்கப்படுகிறது.

காங்கிரஸ், திமுக கூட்டணி அரசில் ஆகாயம் முதல் பாதாளம் வரை ஊழல் புரிந்தனர். மோடி அரசில் நிலக்கரி ஏலம் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்க செய்யப்பட்டது. மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு உழைத்து வருகிறது. மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு பாஜகவினர் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது ரூ.10,138 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஞ்சிய ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் சில மாதங்களில் தொடங்கும். சாலை திட்டங்களுக்கான நிதி ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்.

நீர்வழிச் சாலையை அதிகரிக்க மத்திய அரசு முக்கியத்துவம் வழங்குகிறது. தற்போது 5 நீர்வழிச் சாலை மட்டுமே உள்ளது. வைகை உட்பட 111 புதிய நீர்வழிச் சாலைகள் அடையாளம் காணப் பட்டுள்ளன. நாட்டில் 12 பெரிய துறைமுகங்களும், 800 சிறிய துறைமுகங்களும் உள்ளன. குளச்சல் உட்பட 4 புதிய பெரிய துறைமுகங்கள் ஏற்படுத்தப்படும். 1,500 பாலங்கள் ரூ.30 ஆயிரம் கோடியில் புதுப்பிக்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையை ரூ.10 ஆயிரம் கோடியில் மேம்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், அந்தச் சாலையை மாநில அரசு மத்திய அரசிடம் ஒப்படைக்க தயங்குகிறது. நாட்டின் எல்லையை இணைத்து 7 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்படும் என்றார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மாநில நிர்வாகிகள் சரவணபெருமாள், வானதி சீனிவாசன், மாவட்டத் தலைவர் சசிராமன், செயலர் கார்த்திக்பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT