தமிழகம்

கர்நாடகாவை கண்டித்து முழு அமைதியாக நடந்த போராட்டங்கள்: தமிழகம் முழுவதும் 21 லட்சம் கடைகள் அடைப்பு

செய்திப்பிரிவு

ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் உட்பட 30,000 பேர் கைது

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப் பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் நேற்று நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாகவும், அதேநேரம் முழு அமைதியுடனும் நடந்தது. கடைகள், பெட்ரோல் பங்க்குகள் அடைக்கப்பட்டிருந் தன. போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திரு மா வளவன் உட்பட தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு காவிரியில் சமீபத் தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடகத்தில் தமி ழர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. கர்நாடகாவில் தமி ழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித் தும், காவிரி பிரச்சினைக்கு நிரந் தர தீர்வு காண வலியுறுத்தியும் நேற்று முழு அடைப்பு போராட் டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட் டது. திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து, தமிழகம் முழுவ தும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெரும்பா லான சில்லறை வணிக நிறுவனங் கள், கடைகள், சுய தொழில் நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், நடைபாதை கடைகள், உணவு விடுதிகள் அடைக்கப்பட்டிருந்தன. கோயம்பேடு உட்பட தமிழகத்தின் அனைத்து காய்கறி, பழம், பூ சந்தைகள், மீன், கறிக்கடைகள் செயல்படவில்லை. தமிழகம் முழுவதும் 21 லட்சம் கடைகள், 3 லட்சம் லாரிகள், 55 ஆயிரம் மணல் லாரிகள் இயங்கவில்லை.

மருந்து வணிகர்கள், உணவுப் பொருள் வியாபாரிகள், தொழில் வர்த்தகர்கள், நெல், அரிசி வணி கர்கள், நுகர்பொருள் விநியோகஸ் தர்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், ஸ்வீட் , பேக்கரி கூட்ட மைப்பு, பெட்ரோலிய வணிகர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், லாரி, மணல் லாரி உரிமையா ளர்கள் என ஏராளமான அமைப் புகள் போராட்டத்தில் பங்கேற்ற தால், போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. சினிமா, சின்னத்திரை சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் படப்பிடிப்புகள், பாடல் பதிவு, டப்பிங், எடிட்டிங் உட்பட அனைத்து பணிகளும் ரத்து செய்யப்பட்டன. திரையரங்குகளில் காலை, மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

பஸ்கள், பள்ளிகள் இயங் கின

போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயங்கின, தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ரயில் சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பெரும்பாலான வேன், ஆட்டோக்கள் இயங்க வில் லை. போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் இயங்கின.

முழு அடைப்பு காரணமாக, தனியார் பள்ளி அமைப்புகள் விடுமுறை அறிவித்தன. ஆனால், நேற்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு, காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்றன. 18 சதவீத தனியார் பள்ளிகள் மட்டுமே மூடப்பட்டிருந்ததாகவும், 82 சதவீத பள்ளிகள் இயங்கியதாகவும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் நேற்று செயல்பட்டன. தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படாததால், மாணவர்கள் மாற்று வாகனங்களிலும் பெற்றோருடனும் பள்ளிக்கு வந்து சென்றனர்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,500 பெட்ரோல் பங்க்குகளில் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோ லியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான 197 பெட்ரோல் நிலையங்கள் மட்டும் திறந்திருந்தன. மற்ற பங்க்குகள் செயல்படவில்லை.

தலைவர்கள் கைது

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியல் செய்வதற் காக ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட திமுக மாநி லங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப் பினர் ஜெ.அன்பழகன் உள்ளிட் டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் பிரேம லதா தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய் யப்பட்டார்.

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், சென்னை அசோக்நகர் அசோக் பில்லர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோயம் பேடு காய்கறி வணிக வளாகம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் த.வெள் ளையன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் அதிரடிப் படை யினரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் போராட்டம் முழு அமைதியாக நடந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரயில், சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவின் 17 எம்எல்ஏக்கள் உட்பட 7,561 பேர் கைது செய்யப்பட்டனர். நந்தனத்தில் கார் விற்பனை நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 4,702 பேர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூரில் 3,046 பேர், தஞ்சை, திருவாரூர், நாகையில் 4,715 பேர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் 1,513 பேர், விழுப்புரம், கடலூரில் 2,485 பேர், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் 2,400 பேர், புதுச்சேரி, காரைக்காலில் 367 பேர், திருப்பூரில் 607 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட் டனர்.

புதுச்சேரியில் போராட்டம்

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட வில்லை. போராட்டங்களில் பங்கேற்ற 725-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT