தமிழகம்

ரஜினியை அரசியலுக்கு இழுக்க பாஜக வியூகம்

ஸ்ருதி சாகர் யமுனன்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தங்கள் கட்சிக்கு சாதகமான சூழல் எழுந்துள்ளதாக கணித்துள்ள பாஜக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தங்கள் கட்சியில் இணைக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.

நவராத்திரி விழாவின்போது நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்குச் சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்திடம் சூப்பர்ஸ்டார் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என எடுத்துரைத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: "லதா ரஜினிகாந்திடம் இருந்து வந்த அழைப்பை ஏற்றே தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்குச் சென்றார். ஆனால், அப்போது ரஜினிகாந்த் லிங்கா படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்த தனது புத்தகத்தை ரஜினிகாந்த் வெளியிட வேண்டும் என தமிழிசை வேண்டுகோள் விடுத்தார். ரஜினி சென்னை திரும்பியதும், மீண்டும் அவரை சந்தித்து தனது புத்தகம் குறித்து விரிவாக எடுத்துரைக்க இருக்கிறார். லதா - தமிழிசை சந்திப்பின்போது அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது" இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் ரஜினிகாந்த் போன்ற மக்களின் பேராதரவு பெற்ற ஒருவரை பாஜகவுக்கு ஆதரவு அளிக்க அழைப்பது சரியான முடிவு என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 1996-ல் திமுக-தமாக கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த ஆதரவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டிய அவர், அதுவே ரஜினிகாந்துக்கு இருக்கும் ஆதரவு என சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளன. இந்நிலையில், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் 'சிறந்த தலைவர்' என்பதற்காக நிகராக வெற்றிடமே இருக்கும். அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொள்வது அவசியம் எனவும் அவர் கூறினார்.

தீவிர அரசியிலலில் பாஜகவுக்கு ஆதரவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை களமிறக்குவது தொடர்பான செய்திகள் அண்மைக்காலமாக பரபரப்பாக வெளியாகி வருகின்றன.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, போயஸ் கார்டனுக்கு நேரில் வந்து நரேந்திர மோடி, ரஜினிகாந்தை சந்தித்தார். ரஜினியும் இந்த சந்திப்பு குறித்து நல்ல அபிப்ராயமே கொண்டுள்ளார்.

இதற்கிடையில், கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷாவும் அரசியல் நிலவரம் குறித்து நடிகர் ரஜினியிடம் ஆலோசித்ததாக தெரிகிறது.

- தமிழில்: பாரதி ஆனந்த்

SCROLL FOR NEXT