தமிழகத்தில் காளைகளுக்கும், உயிர்நீத்த வீரர்களுக்கும் கோயில் கட்டி வழிபடும் வழக்கம் இருந்து வருவது நடுகல் சான்றுகளால் தெரியவந்துள்ளது.
தமிழ் சமூகம் தோன்றியது முதல் கால்நடைகளுக்கு அளிக்கப் பட்டு வரும் முக்கியத்துவம் குறித்து பல அரிய தகவல்கள் தெரியவந்துள்ளன. புதிய கற்காலம் முதல் (கி.மு-3000) நிலையாக ஓரிடத்தில் தங்கி, வேளாண் பணிக் காக மாடு, எருமை, ஆடு, கோழி ஆகிய கால்நடை செல்வங்களை முன்னோர் வளர்க்கத் தொடங்கினர். ஓய்வு நேரத்தில் தங்களுக்கும், தாங்கள் வழிபடும் இறைவனுக்கும் வாகனமாக விளங்கும் காளை களுடன் ‘ஏறுதழுவல்’ நடத்தினர். சைவ, வைணவ, சமணம் என 3 தரப்பினரும் இதில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருப்பூர் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் சு.ரவிக்குமார் கூறியதாவது: தொல்காப்பியம் இலக்கண நூலில் புறப்பொருள் வெண்பா மாலை, வெற்றித்திணையில் கால்நடைச் செல்வங்கள் திருடுபோனதாகவும், அவற்றை மீட்க திருடர்களுடன் போர் நடந்ததாகவும் சொல்லப் பட்டுள்ளது. முல்லை நிலத்தில் வாழும் இடையர் மகள் தங்கத் தினால் ஆன ஆபரணங்களைத் தவிர்த்து, பசுக்களையும், அதன் கன்றுகளையும் விலைகொடுத்து வாங்கியதாக பெரும்பாணாற்றுப் படை தெரிவிக்கிறது.
(1) கோவை மாவட்டம், நெகமம் அருகே கிபி 12-ம் நூற்றாண்டில், மாட்டை பாதுகாக்க புலியுடன் போரிட்டு உயிர் நீத்தவருக்காக ஏற்படுத்தப்பட்ட நடுகல். (2) திருப்பூர் அழகுமலையில் கிபி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் களுடன் கூடிய நடுகல். அதில் மனைவி தன் கணவனுக்காக இந்த நடுகல்லை ஏற்படுத்தியது தெரியவருகிறது.
சமயம்
கிபி 8 ம் நூற்றாண்டில் திருப் பாவைப் பாடிய ஆண்டாள் நாச்சி யார் பசுக்களை வள்ளல் எனக் குறிப்பிட்டுள்ளார். புலி போன்ற கொடிய வன விலங்குகளிடம் இருந்து தனது கால்நடைகளைக் காக்க போராடி வீர மரணம் அடைந்த வீரரின் நினைவாக, புலி குத்தி கல் அல்லது நடுகற் கள் தமிழகம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ளன.
தொல்லியல்
சிந்து சமவெளி அகழ்வாய்வு களில் கண்டறியப்பட்ட சுடுமண் முத்திரைகளில், காங்கயம் காளை களின் திமில் இருப்பது வியப்பில் ஆழ்த்தியது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் வெளியிட்ட தங்கம், மற்றும் வெள்ளி நாணயங்களில் காளை முத்திரை பதிக்கப்பட்டுள்ளது என்றார்.
தொல்லியல் ஆர்வலர் க.பொன்னுசாமி கூறும்போது, ‘சங்க காலத்தில் முல்லை நிலத்தில் தான் முதன்முதலாக ‘ஏறுதழுவல்’ நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பெண் குழந்தை பிறந்ததும், அவரது பெற் றோர் காளை கன்றையும் வளர்க்கத் தொடங்கினர். காளையை அடக்கும் இளைஞருக்கே அப்பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். மாடுகளுக்கு ஏற்படும் நோய், அதற்கான மருந்துகள் குறித்து தனியாக ‘மாட்டு வாகடம்’ என்ற நூலும் இருந்துள்ளது.
அழகு தேவன் கதை, கருப்ப தேவன் கதை, மன்னன் சின்னாண்டி கதைப் பாடல் மற்றும் சிந்துப் பாடல்களும் மாடுகளுக்காக இயற்றப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலை, தேவனூர் புதூர், மைவாடி, மதுரை மாவட்டம் வீரபாண்டி, சிவகங்கை மாவட்டம் ஆத்தைக்கூர், மூக்கோயில்பட்டி உட்பட பல கிராமங்களில் இறந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதனை இன்றும் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்’ என்றார்.