சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்று நோய் அறுவை சிகிச்சை குறித்த 3 நாள் கருத்தரங்கம் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் இயக்குநர் நசீர் அகமது, ஆர்எம்ஓ ஆனந்த் பிரதாப், புற்று நோய் அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குநர் ராஜாராமன், புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் போஸ், உதவி பேராசிரியர் டாக்டர் சுஜய் மற்றும் நாடு முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
கருத்தரங்கின் முதல் நாளில் லேப்ரோஸ்கோபி மூலம் செய்யப் பட்ட மார்பு, வாய், கர்ப்பப்பை வாய் உட்பட 7 புற்று நோய் அறுவை சிகிச்சைகள் நேரடியாக கருத்தரங்கு நடந்த அறையில் ஒளிபரப்பப்பட்டது. இரண்டாம் நாளில், 6 புற்று நோய்கள் குறித்து டாக்டர்கள் பேசினர். மூன்றாம் நாளான நேற்று, புற்று நோயால் பாதிக்கப்பட்ட மார்பகம், கர்ப்பப்பையை எடுப்பது, எலும்பை அகற்றிவிட்டு செயற்கை எலும்பு வைப்பது போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த மூன்று நாள் கருத்தரங்கம் குறித்து புற்று நோய் அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர் டாக்டர் சுஜய் கூறியதாவது:
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்று நோய் அறுவை சிகிச்சை மையம் 2013-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த மையம் வருவதற்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை டாக்டர்கள் ராஜாராமன், போஸ் முக்கிய காரணமாக இருந்தார்கள். இருவரும் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்கள். அவர்களை பாராட்டி நன்றி தெரிவிப்பதற்காக, புற்று நோய் அறுவை சிகிச்சைகள் குறித்து விவாதிக்க இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
8 மாடிகள் கொண்ட இந்த மையத்தில் 150 படுக்கைகள் உள்ளன. தினமும் 50 முதல் 80 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களில் 20 முதல் 30 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 3 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. மார்பு, வாய், கர்ப்பப்பைவாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்