தமிழகம்

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

செய்திப்பிரிவு

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க 2016 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகை களின் கீழ் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு வகை யிலும் ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரம், நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

போட்டிக்குரிய விண்ணப் பத்தை www.tamilvalarchithurai.org என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008’ என்ற முகவரியில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். ரூ.10-க்கான தபால்தலை ஒட்டிய 23x10 செ.மீ. அளவிலான சுய முகவரியிட்ட உறையை அனுப்பி, அஞ்சல் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

போட்டிக் கட்டணம் ரூ.100. இதை வங்கி கேட்பு காசோலையாக ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை’ என்ற பெயரிலோ அல்லது அலுவலகத்தில் நேரிலோ செலுத்தலாம். அதற்கான செலுத்துசீட்டுடன், புத்தகத்தின் 10 நூற்படிகளையும் போட்டிக்கான விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாளாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT