தமிழகத்தில் வறட்சி பாதிப்பை கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழகத்தின் 31 மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சி களிலும் செயல்படுத்தப் படுகிறது. கடந்த 2016-17-ம் நிதியாண்டில் தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை, 33 ஆயிரத்து 343 கோடி மனித சக்தி (தமிழகம் முழுவதும் ஒருநாளில் பணியாற்றியோர் எண்ணிக்கை) நாட்கள் உருவாக்கப் பட்டன. இதன் மூலம், தொழி லாளர்களுக்கு ஊதியமாக ரூ.4 ஆயிரத்து 655 கோடி வழங்கப் பட்டுள்ளது. அதற்கு முந்தைய 2015-16-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 3 கோடி மனித சக்தி நாட்கள் அதிகரித்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் தினசரி 12 லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். தற்போது வறட்சி காரணமாக இத்திட்டத்தின் கீழ் பயனடையும் தொழிலாளர்கள் எண்ணிக்கை 18 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழக அரசு 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களை விட கூடுதல் நாட்கள் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களுக்கும் கூடுதலாக 50 நாட்கள் என 150 நாட்கள் வேலை வழங்க அனுமதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் ஒருகோடியே 23 லட்சம் கிராமப் புற தொழிலாளர்கள் பயனடை வார்கள். இத்திட்டத்தின் கீழ் வறட்சி யில் இருந்து பாதுகாத்துக் கொள் ளும் நடவடிக்கையாக, குட்டைகள், ஏரிகளை தூர்வாருதல் மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகளும் மேற் கொள்ளப்படும்.
இத்தகவலை தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.