திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி ஹவாலா பணமாக இருக்கலாம் என்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
தேர்தல் நேரத்தில் கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் உள்ள பெருமநல்லூரில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் ஆந்திராவுக்கு 3 கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை பறக்கும்படையினர் மடக்கிப் பிடித்தனர்.
இந்தப் பணத்துக்கு ஸ்டேட் வங்கி சொந்தம் கொண்டாடிய நிலையில் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு முகாந்திரம் இல்லை என சிபிஐ சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நடந்தது.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தனது வாதத்தில், ‘‘திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடியும் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும், அதை மறைப்பதற்காக ஸ்டேட் வங்கி நிர்வாகம் அந்தப் பணம் தன்னுடையது தான் என சொந்தம் கொண்டாடுவதற்காக பல ஆவ ணங்களை தயாரித்து உள் ளது. இதில் ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி அதிகாரி களின் கூட்டு சதி உள்ளது. இந்தப் பணம் குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ முழுமை யாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
ஒரு புகாரின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்கு முன்பாக அந்த புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும் என ஒரு வழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் வங்கி மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காகவே சிபிஐ தனியாக ஒரு பிரிவை வைத்துள்ளது. கோவையில் இருந்து இந்தப் பணத்தை ஆந்திராவுக்கு கொண்டு செல்ல ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக ஸ்டேட் வங்கி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அப்படி ஒரு அனுமதியை நாங்கள் தரவில்லை என முரண்பாடான தகவலை ரிசர்வ் வங்கி தந்துள்ளது. எனவே இதில் வங்கி அதிகாரிகள் ஆவணங்களை திருத்தி மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பதால், இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரிக்க உரிய முகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பது அவசியமானதும் கூட’’ என்றார்.
உகந்தது அல்ல
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சு.சீனிவாசன், ‘‘இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உகந்தது அல்ல. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிகளின் பெயரையும் மனுதாரர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. மோசடி எப்படி நடந்தது என்பதையும் விரிவாக விளக்கவில்லை. ஆகவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கத் தேவையில்லை’’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.சுப்பையா, இந்தவழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.