தமிழகம்

எவ்வளவோ சாதனைகள் படைக்க வேண்டியவர் நா.முத்துக்குமார்: வீரமணி புகழஞ்சலி

செய்திப்பிரிவு

இன்னும் எவ்வளவோ சாதனைகளை படைக்க வேண்டிய நா.முத்துக்குமாரை நாம் இழந்திருப்பது வேதனைக்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

நா.முத்துக்குமார் மறைவு குறித்து இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''தமிழ்த் திரைப்பட உலகில் அண்மைக் காலத்தில் அனைவரின் கவனத்தையும் தமது அழுத்தமான கருத்துச் செறிந்த பாடல் வரிகளால் ஈர்த்த கவிஞர் நா.முத்துக்குமார் (வயது 41) மறைந்த செய்தி அறிந்து திடுக்குற்றோம். இன்னும் எவ்வளவோ சாதனைகளை படைக்க வேண்டிய ஒருவரை நாம் இழந்திருப்பது வேதனைக்குரியது.

மாணவர் பருவம் தொட்டு பெரியார் திடலோடு அணுக்கமான தொடர்பு கொண்டவர். கழகப் பிரச்சார பாடல்களை எழுதிக் கொடுத்தவர். தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, கழகத்தால் பெரியார் விருதும் பெற்ற இளந்தமிழர் ஒருவர் மறைந்தது தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பாகும்.

நா.முத்துக்குமாரிடம் பாடம் பயின்று உடல் நலனை ஓம்புங்கள் என்று அனைத்து தமிழர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் திரை உலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT